கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி + "||" + 20-over cricket against New Zealand: Indian team wins

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 204 ரன்கள் இலக்கை இந்திய அணி 19-வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது.
ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக லோகேஷ் ராகுல் நீடித்ததால், ரிஷாப் பண்டுக்கு இடம் கிடைக்கவில்லை.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி காலின் முன்ரோவும், மார்ட்டின் கப்திலும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் எதிர்பார்த்தது போலவே ரன்மழை பொழிந்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சை குறி வைத்து நொறுக்கினர். காலின் முன்ரோ, அவரது ஒரு ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 68 ரன்கள் திரட்டினர். வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி இந்தியாவின் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. இதனால் நியூசிலாந்தின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது.

வலுவான அஸ்திவாரம் அமைத்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 80 ரன்களை (7.5 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. கப்தில் (30 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷிவம் துபே வீசிய பந்தை தூக்கியடித்த போது அதை எல்லைக்கோடு அருகே நின்ற ரோகித் சர்மா பிரமாதமாக கேட்ச் செய்தார். அதாவது பந்தை பிடித்த ரோகித் சர்மா, தடுமாறியதால் உள்பக்கமாக பந்தை தூக்கிப்போட்டு விட்டு மீண்டும் கேட்ச் செய்து அசத்தினார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் வந்தார்.

இந்த ஆடுகளத்தில் நேர்பகுதி பவுண்டரி தூரம் (55 மீட்டர் மட்டும்) மிகவும் குறைவானதாகும். அதனால் பந்தை ஸ்டம்புக்குள் போட்டால் எல்லைக்கோட்டை நோக்கி சுலபமாக அடிக்க வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்த இந்திய பவுலர்கள் நிறைய ஷாட்பிட்ச் பந்துகளை வீசினர். ஆனால் அந்த வியூகத்துக்கும் பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக வில்லியம்சன், தாகூரின் ஓவரில் இவ்வாறு வந்த பந்துகளை லெக்சைடில் அடுத்தடுத்து சிக்சராக்கினார். இதே போல் ஷிவம் துபே வீசிய பந்தும் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தது.

இதற்கிடையே காலின் முன்ரோ 59 ரன்களிலும் (42 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), காலின் டி கிரான்ட்ஹோம் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் ரன்வேட்டைக்கு பக்கபலமாக இருந்தார். முகமது ஷமியின் பந்து வீச்சில் சர்வ சாதாரணமாக பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்க விட்டார்.

ஸ்கோர் 178 ரன்களாக உயர்ந்த போது (17 ஓவர்) வில்லியம்சன் 51 ரன்களில் (26 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். இதனால் இறுதி கட்டத்தில் ரன்வேகம் சற்று தணிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் 54 ரன்களுடன் (27 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ஆரம்ப கட்ட ஆட்டத்தின் கணிப்பில், நியூசிலாந்து அணி 220 முதல் 230 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது முதல் 2 ஓவர்களில் (8 ரன்) சிக்கனத்தை காட்டியதும், வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததும் எதிரணியை சற்று கட்டுக்குள் கொண்டு வர உதவியது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக துணை கேப்டன் ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும் நுழைந்தனர். சானட்னெரின் சுழலில் சிக்சர் அடித்த ரோகித் சர்மா (7 ரன்) அடுத்த பந்தையும் விளாச முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி வந்ததும் ஆட்டம் சூடுபிடித்தது. டிக்னெரின் பந்து வீச்சில் சூப்பராக ஒரு சிக்சர் தூக்கி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். ராகுலும் நியூசிலாந்து பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார். இதனால் ரன்ரேட் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்தது. இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. ராகுல் 27 ரன்னில் இரண்டு முறை ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். கோலி 33 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சோதி கோட்டை விட்டார்.

இவர்களின் சரவெடி ஜாலத்தால் 8.4 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. ஆனால் முக்கியமான கட்டத்தில் ராகுல் 56 ரன்களிலும் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கோலி 45 ரன்களிலும் (32 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்தடுத்து விக்கெட்டை தாரைவார்த்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி உருவானது.

இந்த சூழலில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆபத்பாந்தவனாக அணிக்கு கைகொடுத்தார். இன்னொரு முனையில் ஷிவம் துபே (13 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி காட்டி அணிக்கு நம்பிக்கையூட்டினார். வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரை வீசிய டிம் சவுதியின் பந்து வீச்சிலேயே ஆட்டத்தை இந்திய வீரர்கள் தித்திப்பாக முடித்து வைத்தனர். இந்த ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர், பவுண்டரி, 2 சிக்சர் தெறிக்க விட்டு சிலிர்க்க வைத்தார்.

இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களுடனும் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மனிஷ் பாண்டே 14 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 


கேப்டன்கள் கருத்து

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் உற்சாகமாக அனுபவித்து விளையாடினோம். இங்கு (நியூசிலாந்து) வந்து சேர்ந்த இரண்டு நாட்களிலேயே இந்த வகையில் விளையாடி வெற்றி பெற்றிருப்பது அற்புதமானது. இந்திய ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக இருந்தது. குழுமியிருந்த ரசிகர்களில் 80 சதவீதம் பேர் எங்களுக்கு ஆதரவாக இருந்தது போல் தெரிந்தது. கடந்த ஓராண்டாக நாங்கள் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறோம். இது போன்ற ஆடுகளங்களில் யாரையும் கடுமையாக குறை சொல்ல முடியாது. ஒரு கட்டத்தில் அவர்கள் 230 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களை 210 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சி. மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஆனால், பீல்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘தோல்வி அடைந்தாலும் இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் அதிக ரன்கள் குவித்தாலும் அதை கொண்டு வெற்றி காண்பது கடினம் என்பதை அறிவேன். இதில் பனிப்பொழிவின் தாக்கமும் இருந்தது. இந்திய வீரர்கள் தொடர்ந்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். சில விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்ற வழிமுறையை கண்டறிய வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது.
3. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா உள்பட 64 நாடுகளுக்கு கூடுதல் நிதி- அமெரிக்கா
கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு கூடுதல் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.