பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி


பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
x
தினத்தந்தி 24 Jan 2020 11:37 PM GMT (Updated: 24 Jan 2020 11:37 PM GMT)

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின், தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றிபெற்றது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எலைட் ‘சி’ பிரிவில் தமிழக அணி இடம் பிடித்துள்ளது. ‘சி’ பிரிவின் முதல் சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் நேற்று ஆரம்பமானது. சென்னை ஆவடியில் உள்ள முருகப்பா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தனது முதல் லீக் ஆட்டத்தில் தமிழக அணி, அசாமை சந்தித்தது. முதலில் ஆடிய தமிழக அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அர்ஷி சவுத்ரி 103 ரன்கள் எடுத்தார். பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அசாம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே எடுத்தது. இதனால் தமிழக அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் கீர்த்தனா 3 விக்கெட்டும், எலோக்சி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மற்றொரு லீக் ஆட்டத்தில் சத்தீஷ்கார் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவா அணியை வென்றது. நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழக அணி, அரியானாவை எதிர்கொள்கிறது.


Next Story