கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றியை தொடருமா? + "||" + New Zealand cricket: Will India continue to win?

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றியை தொடருமா?

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றியை தொடருமா?
இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்த அடுத்த சில நாட்களிலேயே இந்த போட்டி ஆரம்பித்ததால், ‘ஓய்வில்லா நெருக்கமான சுற்றுப்பயணம்’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி விமர்சித்தார். ஆனாலும் நியூசிலாந்து தொடரை இந்தியா அட்டகாசமாக தொடங்கி இருக்கிறது.

நியூசிலாந்து அணி 203 ரன்கள் குவித்த போதிலும் அதை இந்தியா ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமாதப்படுத்தியது. ஸ்ரேயாஸ் அய்யர் (58 ரன்), விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் (56 ரன்), கேப்டன் விராட் கோலி (45 ரன்) பேட்டிங்கில் அசத்தினர். சிறிய மைதானமான இங்கு சிக்சர், பவுண்டரி விளாசுவது எளிது. அதனால் பந்து வீச்சாளர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும்.

முதல் ஆட்டத்தை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை (4 ஓவரில் 31 ரன்) தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ஓவருக்கு சராசரி 8 ரன்களுக்கு மேலாக விட்டுக்கொடுத்திருந்தனர். 3 ஓவர்களில் 44 ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி வீறுநடையை தொடர்வதில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

போட்டி நடப்பது நியூசிலாந்தில் என்றாலும் முதல் ஆட்டத்தை காண இந்திய ரசிகர்களே அதிக அளவில் வந்திருந்தனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய ரசிகர் பட்டாளம் கணிசமாக குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்த போதிலும், பந்து வீச்சில் சொதப்பியதால் அவர்களால் 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் அதை வெற்றி இலக்காக மாற்ற முடியவில்லை. கடைசி கட்ட ஓவர்களில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாறிப்போனார்கள். இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் மீண்டும் 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும், பந்து வீச்சில் ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும். இது தான் முதல் ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடமாகும். ஆட்டத்தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் ஒவ்வொரு மாதிரி பந்து வீசுகிறோம். சக பவுலர் மிட்செல் சான்ட்னெர் மற்றும் கேப்டன் வில்லியம்சனுடன் நிறைய நேரம் ஆலோசித்தேன். தொடக்க ஆட்டத்தில் ஒரு ஓவரை ரன்னை கட்டுப்படுத்தும் விதத்திலும், மற்றொரு ஓவரை தாக்குதல் பாணியிலும் வீசியதை புரிந்து கொண்டேன். பந்து வீச்சில், ஆட்டம் முழுவதும் ஒரே மாதிரி ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாள வேண்டியது அவசியமாகும்.

அதே சமயம் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் 5-6 பேர் உள்ளனர். அவர்களை அதுவும் இத்தகைய சிறிய மைதானத்தில் கட்டுப்படுத்துவது கடினம். 4 ஓவர்களில் 45 ரன்கள் வழங்கினாலும் இந்த மைதானத்தில் ஓரளவு நல்ல பந்து வீச்சாகத் தான் இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர், ஹாமிஷ் பென்னட்.

இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார்.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
4. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.