கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி + "||" + 20 over cricket against New Zealand: India's second win

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
ஆக்லாந்து,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நேற்று நடந்தது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஷர்துல் தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே கப்தில் அட்டகாசமாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் முதலாவது ஆட்டத்தை போன்று பந்து சகட்டுமேனிக்கு ஓடவில்லை. ஆடுகளத்தன்மை மெதுவாக காணப்பட்டதால் ஸ்கோர் நிதானமாகவே நகர்ந்தது. கப்தில் (33 ரன், 20 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஷர்துல் தாகூர் வைடாக வீசிய பந்தை அடித்து விக்கெட்டை தாரை வார்த்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் வந்தார். மற்றொரு தொடக்க வீரர் காலின் முன்ரோ தனது பங்குக்கு 26 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு காலின் கிரான்ட்ஹோம் இறங்கினார்.

மிடில் ஓவர்களில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா சுழல் ஜாலம் காட்டினார். முந்தைய ஆட்டத்தில் இதே ஸ்டேடியத்தில் வாணவேடிக்கை காட்டிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் ஒன்று, இரண்டு ரன்கள் எடுக்கவே பெரும்பாடு பட வேண்டி இருந்தது. இந்திய வீரர்கள் பீல்டிங்கிலும் துடிப்புடன் செயல்பட்டனர். 10 முதல் 15 ஓவர் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே போகவில்லை. இதனால் நியூசிலாந்தின் ஸ்கோர் ஆமை வேகத்துக்கு சென்றது.

இதற்கு மத்தியில் கிரான்ட்ஹோம் (3 ரன்), வில்லியம்சன் (14 ரன்) இருவரும் ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். இதைத் தொடர்ந்து ராஸ் டெய்லரும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் அதிரடிக்கு பலவாறு முயற்சித்தனர். யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் செய்பெர்ட் பவுண்டரி, சிக்சர் அடித்தார். அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களது பேட்டிங் இல்லை. ஜடேஜா தனது 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காதது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்திய பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் ஆடுகளத்தில் சரியான இடத்தில், துல்லியமான அளவில் ஆப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே பந்து வீசியபடி இருந்தனர். இந்த யுக்தி தான் நியூசிலாந்து வீரர்களை மிரள வைத்தது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவும், முகமது ஷமியும் இப்பணியை கனகச்சிதமாக செய்தனர். நிறைய பந்துகளை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொட கூட முடியாமல் தவித்தனர். கைவசம் விக்கெட் இருந்தும் அதுவும் உள்ளூர் சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்து வீரர்கள் கடைசி 4 ஓவர்களில் பந்தை ஒரு முறை மட்டுமே எல்லைக்கோட்டுக்கு விரட்டியது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ராஸ் டெய்லர் 18 ரன்னில் (24 பந்து) கேட்ச் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணியின் 3-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். செய்பெர்ட் 33 ரன்கள் (25 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும் களம் புகுந்தனர். முதல் ஓவரில் 2 பவுண்டரி ஓடவிட்ட ரோகித் சர்மா (8 ரன்) அதே ஓவரில் ஸ்விங் ஆன கடைசி பந்தில் ஸ்லிப்பில் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் நிலைக்கவில்லை. டிம் சவுதி லெக்சைடில் வீசிய பந்தை தட்டிவிட முற்பட்ட போது பந்து பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் செய்பெர்ட்டிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

39 ரன்னுக்குள் 2 விக்கெட் விழுந்ததால் இந்தியாவுக்கு லேசான நெருக்கடி உருவானது. இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து அவசரம் காட்டாமல் நேர்த்தியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், வெற்றிப்பாதைக்கும் அடித்தளமிட்டனர். முதல் ஆட்டத்தை போன்றே இந்த முறையும் ராகுல் அரைசதத்தை கடந்தார்.

அணியின் ஸ்கோர் 125 ரன்களாக உயர்ந்த போது, ஸ்ரேயாஸ் அய்யர் (44 ரன், 33 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் சோதியின் பந்து வீச்சில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். இது சோதியின் 50-வது விக்கெட்டாகும். இந்த மைல்கல்லை எட்டிய 4-வது நியூசிலாந்து பவுலர் சோதி ஆவார்.

இதன் பின்னர் வந்த ஷிவம் துபே பந்தை சிக்சருக்கு விளாசி ஆட்டத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராகுல் 57 ரன்களுடனும் (50 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதே மைதானத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்து வெற்றி பெறுவது இதுவே முதல்நிகழ்வாகும். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி வருகிற 29-ந்தேதி ஹாமில்டனில் நடக்கிறது. 


பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இன்னொரு சிறந்த செயல்பாடு இது. குறிப்பாக பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி எதிரணியை கட்டுப்படுத்தினர். இங்கு முதலில் பேட் செய்யும் போது 160 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். இந்த மைதானத்தில் எந்த மாதிரி பீல்டர்களை நிறுத்த வேண்டும், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் அணுகுறை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து செயல்பட்டோம். ஜடேஜா, பும்ராவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. அடுத்தடுத்து தோல்வி காரணமாக நியூசிலாந்து அணி பலமாக எழுச்சி பெற முயற்சிக்கும். அதற்கு ஏற்ப தயாராக வேண்டும்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இது எங்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. முதல் ஆட்டத்தை ஒப்பிடும் போது ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சவாலாக இருந்திருக்கும். ஆனால் எல்லா பெருமையும் இந்திய பவுலர்களையே சாரும். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் எங்களை தோற்கடித்து விட்டனர்.’ என்றார்.

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆடுகளத்தன்மை மென்மெலும் வேகம் குறைந்து (ஸ்லோ) காணப்பட்டது. இதனால் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. டாப்-4 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவசியமாகும். இந்திய வீரர்கள் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆட்டத்தை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டனர். இதே போன்ற பார்ட்னர்ஷிப்பை எங்களால் ஏற்படுத்த இயலவில்லை. இந்திய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். நிறைய பந்துகளில் ரன் எடுக்காமல் வீணடித்து விட்டோம். அது தான் இன்னிங்சில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
4. கொரோனா பாதிப்பு : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது.
5. லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது