கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி; சூப்பர் ஓவரில் இந்தியா ‘திரில்’ வெற்றி: தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது + "||" + 3rd 20th ODI against New Zealand India win the Super Over

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி; சூப்பர் ஓவரில் இந்தியா ‘திரில்’ வெற்றி: தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி; சூப்பர் ஓவரில் இந்தியா ‘திரில்’ வெற்றி: தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
ஹாமில்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிளேர் டிக்னெருக்கு பதிலாக குஜ்ஜெலின் சேர்க்கப்பட்டார்.


தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த முறை முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் என்பதால் இருவரும் மட்டையை அதிரடியாக சுழற்றுவதில் கவனம் செலுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் ஹாமிஷ் பென்னட்டுவின் ஒரே ஓவரில் ரோகித் சர்மா 3 பிரமாதமான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி நொறுக்கி திகைப்பூட்டினார். அத்துடன் தனது 20-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார். இதன் மூலம் ‘பவர்-பிளே’க்குள் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றார்.

‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் திரட்டியது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி சுலபமாக 200 ரன்களை கடக்கும் போலவே தோன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் இந்தியாவின் ரன்வேகம் தளர்ந்தது. ஸ்கோர் 89 ரன்களை (9 ஓவர்) எட்டிய போது லோகேஷ் ராகுல் (27 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து விராட் கோலிக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே இறக்கப்பட்டார். சந்தித்த முதல் 4 பந்தில் ஷிவம் துபே ரன்னே எடுக்கவில்லை. இந்த பேட்டிங் வரிசை மாற்றத்தால் இந்தியாவின் உத்வேகத்துக்கு தடை ஏற்படுத்துவது போல் ஆகி விட்டது.

ரோகித் சர்மாவும் (65 ரன், 40 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவம் துபேவும் (3 ரன், 7 பந்து) பென்னட்டுவின் ஒரே ஓவரில் விக்கெட்டை பறிகொடுக்க இந்தியாவுக்கு நெருக்கடி உருவானது. ரன்ரேட் 10-ல் இருந்து 9-க்கு குறைந்தது.

மிடில் வரிசையில் விராட் கோலி (38 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தார். கடைசி ஓவரில் மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா விரட்டிய சிக்சரால் இந்திய அணி ஒரு வழியாக 170 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

அடுத்து 180 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்து (5.4 ஓவர்) நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். கப்தில் 31 ரன்னிலும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), காலின் முன்ரோ 14 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இதன் பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களம் கண்டு நிலைத்து நின்று விளையாட இன்னொரு பக்கம் நியூசிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. இந்திய அணி பீல்டிங்கில் நேற்று சொதப்பியது. சில பந்துகளை சரியாக பிடிக்காமல் ரன்களை விட்டுக்கொடுத்ததுடன், ஜடேஜா ஒரு கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டார். இதற்கு மத்தியில் கேப்டனுக்கே உரிய பாணியில் கச்சிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன், அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். ஜடேஜாவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், பும்ராவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி சாத்தி, உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி துரிதமாக பயணித்தது. 20 ஓவர் போட்டியில் முதல்முறையாக 90 ரன்களை கடந்த வில்லியம்சன் சதத்தையும் நெருங்கினார்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. கேப்டன் வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் களத்தில் நின்றனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 20-வது ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டெய்லர், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் 4 பந்தில் 2 ரன் மட்டுமே அந்த அணிக்கு தேவையாக இருந்தது. நியூசிலாந்து வென்று விடும் என்பதே பெரும்பாலானோர்களின் எண்ணமாக இருந்திருக்கும்.

இந்த பரபரப்பான சூழலில் 3-வது பந்தை ஆப்-சைடுக்கு சற்று வெளியே எழும்பி வரும் வகையில் ஷமி வீசினார். அதை அடிக்க முயற்சித்து வில்லியம்சன் (95 ரன், 48 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். 


அடுத்து விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட் வந்தார். ஷமி 4-வது பந்தையும் அதே போன்று ஷாட்பிட்ச்சாக ஆப்-சைடுக்கு வெளியே எகிற வைத்தார். இந்த பந்தை செய்பெர்ட்டால் தொட முடியவில்லை. 2 பந்தில் 2 ரன் தேவையாக இருந்ததால் பரபரப்பு தொற்றியது. சொல்லி வைத்தார் போன்று 5-வது பந்தையும் அதே பாணியில் ஷமி வீசினார். இந்த தடவையும் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பருக்கு சென்றது. அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓடி எடுத்து விட்டனர். இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் அந்த அணிக்கு தேவைப்பட்டது. கடைசி பந்தை சந்தித்த ராஸ் டெய்லர் (17 ரன்) கிளன் போல்டு ஆனார். அதாவது பந்து அவரது பேட்டில் உரசிக்கொண்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் நியூசிலாந்தின் ஸ்கோரும் 179 ரன்களில் நின்றதால் திரிலிங்கான இந்த ஆட்டம் டையில் (சமன்) முடிந்தது.

இதையடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 விக்கெட் வழங்கப்படும்.

சூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து பேட் செய்தது. கேப்டன் வில்லியம்சனும் மார்ட்டின் கப்திலும் இறங்கினர். இந்திய தரப்பில் சூப்பர் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவரது பந்து வீச்சை புரட்டியெடுத்த அவர்கள் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 17 ரன்கள் விளாசினர். பும்ரா, யார்க்கராக போட முயற்சித்து 3 பந்துகளை புல்டாஸ்களாக வீசி ரன்களை வாரி வழங்கி விட்டார். 


அடுத்து 18 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா சார்பில் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நுழைந்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வீசினார். இதில் முதல் 4 பந்தில் இந்தியா 8 ரன் எடுத்ததால் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை மெகா சிக்சருக்கு தூக்கிய ரோகித் சர்மா, கடைசி பந்தையும் சிக்சருக்கு தெறிக்கவிட்டு இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா 20 ஓவர் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அங்கு இரண்டு முறை 20 ஓவர் தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி 2009-ம் ஆண்டில் 0-2 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டில் 1-2 என்ற கணக்கிலும் இழந்து இருந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 


டோனியை முந்தினார், கோலி

* நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கும், சூப்பர் ஓவருக்கும் அதிர்ஷ்டமே இல்லை. கடைசியாக அவர் வீசிய 4 சூப்பர் ஓவர்களிலும் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது.

* இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாக மாறினார். இது அவரது 2-வது மோசமான பந்து வீச்சாகும்.

* நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் விளாசினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

* இந்த ஆட்டத்தில் விராட் கோலி 25 ரன்கள் எடுத்த போது, கேப்டனாக சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இச்சிறப்பு டோனியின் (1,112 ரன்) வசம் இருந்தது. அவரை கோலி முந்தியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் (1,273 ரன்) முதலிடத்தில் உள்ளார்.

* மூன்று ஆட்டத்திலும் இன்னொரு ஆச்சரியமான ஒற்றுமை உள்ளது. முதலாவது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும், 2-வது ஆட்டத்தில் ஷிவம் துபேவும், 3-வது ஆட்டத்தில் ரோகித் சர்மாவும் பந்தை சிக்சருக்கு விளாசி இலக்கை எட்ட வைத்திருக்கிறார்கள்.

‘வில்லியம்சனுக்காக வருந்துகிறேன்’ - கோலி

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஒரு கட்டத்தில் ஆட்டம் கையை விட்டு போய் விட்டதாக நினைத்தேன். வெற்றிக்கு தகுதியான அணி நியூசிலாந்து என்று எங்களது பயிற்சியாளரிடம் கூறினேன். அந்த அளவுக்கு வில்லியம்சனின் பேட்டிங் இருந்தது. இப்படியொரு இன்னிங்சை விளையாடி ஆட்டம் நமக்கு சாதகமாக அமையவில்லை என்றால் அது எப்படிப்பட்ட உணர்வை தரும் என்பதை புரிந்து கொள்கிறேன். வில்லியம்சனுக்காக நான் வருந்துகிறேன். கடைசி பந்தை வீசுவதற்கு முன்பாக ஆலோசித்தோம். எந்த வகையில் ஒரு ரன் போனாலும் தோல்வி தான் ஏற்படும், அதனால் ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசுவது என்று முடிவு செய்தோம். விக்கெட் வீழ்த்தி அந்த பணியை ஷமி சரியாக செய்து முடித்தார். இரண்டு இன்னிங்சிலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் அற்புதம். சூப்பர் ஓவரில் கடைசி 2 பந்துகளையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் ஒரு பந்தை விளாசினாலும் அதன் பிறகு பந்து வீச்சாளர் உடனடியாக நெருக்கடிக்குள்ளாகி விடுவார் என்பது தெரியும். அது மாதிரியே நடந்தது. தொடரை கைப்பற்றி விட்டதால் அடுத்த ஆட்டங்களில் வெளியில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முயற்சிப்போம்’ என்றார்.

கடைசி 5 பந்துகளில் 3 ரன் கூட எடுக்க முடியாமல் ஆட்டம் டையில் முடிந்து அதன் பிறகு தோல்வியையும் சந்தித்ததால் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘சூப்பர் ஓவர் இதுவரை எங்களுக்கு சிறப்பாக இருந்ததில்லை. அதனால் வழக்கமான ஆட்டத்தின் போது இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்த அளவுக்கு போராடிய பிறகு தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. முக்கியமான தருணத்தில், கடைசி 3 பந்துகளில் இந்தியா தனது அனுபவத்தின் மூலம் சாதித்து காட்டியது. இதை இந்தியாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித் சர்மா கூறுகையில், ‘அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்று நான் சிந்திக்கவே இல்லை. ஆட்டம் இழந்ததும் எனது விளையாட்டு உபகரணங்களை பேக்கில் வைத்து விட்டேன். சூப்பர் ஓவரில் ஆட வேண்டி வந்ததும் எனது வயிற்று தடுப்புறையை கண்டுபிடிக்க சுமார் 5 நிமிடங்கள் ஆகி விட்டது. சூப்பர் ஓவரில் இதற்கு முன்பு நான் பேட்டிங் செய்ததில்லை. அதனால் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது தெரியவில்லை. அதாவது முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவதா? அல்லது ஒன்றிரண்டு ரன் வீதம் எடுப்பதா என்பது புரியவில்லை. மொத்தத்தில் இது நல்ல ஆட்டமாக இருந்தது’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
5. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.