நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? 4-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது


நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? 4-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 Jan 2020 11:30 PM GMT (Updated: 30 Jan 2020 9:33 PM GMT)

இந்தியா-நியூசிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. இந்தியாவின் ‘வீறுநடை’ இந்த ஆட்டத்திலும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

வெலிங்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி ஹாமில்டனில் நடந்த முந்தைய ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பு வரை சென்று தப்பியது. நியூசிலாந்துக்கு கடைசி 5 பந்தில் 3 ரன் மட்டுமே தேவையாக இருந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் இரண்டு பிரமாதமான சிக்சரின் மூலம் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது.

தொடரை வென்று விட்டதால் அடுத்து வரும் ஆட்டங்களில் இதுவரை வாய்ப்பு பெறாத வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்தார். இதன்படி வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது.

பரிசோதனை முயற்சியை கையில் எடுத்தாலும், நியூசிலாந்து மண்ணில் தங்களது ஆதிக்கத்தை விடாமல் நிலைநாட்டுவதிலும் இந்திய வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய டாப்-4 பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களின் ரன்ஜாலம் இந்த ஆட்டத்திலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாகும்.

தொடரை இழந்து விட்டதால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக வரிந்து கட்டும். கடந்த ஆட்டத்தில் கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் விளாசியும் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.

வெலிங்டன் மைதானம் நியூசிலாந்துக்கு ராசியானது. இங்கு அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் தொடர்ச்சியாக 6 வெற்றி பெற்றதும் அடங்கும். இந்திய அணி இங்கு நியூசிலாந்துக்கு எதிராக 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் (2009 மற்றும் 2019-ம் ஆண்டு) தோற்று இருக்கிறது. அதனால் நியூசிலாந்து வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது, ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடைசியாக நடந்த 3 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், டாம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் சவுதி, ஹாமிஷ் பென்னட், சோதி.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story