ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 1 Feb 2020 12:28 AM GMT (Updated: 1 Feb 2020 12:28 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. இதன்படி அந்த அணி இந்தியாவுடன் 4-ந்தேதி மோத உள்ளது.

பெனோனி,

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெனோனியில் நேற்று நடந்த 4-வது கால்இறுதியில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.1 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பர்ஹான் ஜாஹில் 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் கான் 3 விக்கெட்டுகளும், பஹத் முனிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 41.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹூரைரா அரைசதம் (64 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார்.

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி அரைஇறுதியில் பரம போட்டியாளரான நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் 4-ந்தேதி போட்செப்ஸ்ட்ரூமில் மோதுகிறது. 6-ந்தேதி நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் வங்காளதேசம்-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.

பாகிஸ்தான் கேப்டன் ரோகைல் நசிர் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக மோதுவது என்பது எங்களுக்கு மற்றொரு சாதாரண ஆட்டம் தான். இந்தியா சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைய கால்இறுதியின் போது ரசிகர்கள் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினர். அரைஇறுதி ஆட்டத்திலும் இதே போன்று ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story