சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு-பரோடா ஆட்டம் ‘டிரா’


சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு-பரோடா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 1 Feb 2020 11:28 PM GMT (Updated: 1 Feb 2020 11:28 PM GMT)

சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு-பரோடா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.

சென்னை,

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதிய ஆட்டம் கோவையில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பரோடா அணி 287 ரன்னும், தமிழக அணி 232 ரன்னும் எடுத்தன. 55 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து இருந்தது. ஜோத்னில் சிங் 119 ரன்னுடனும், தேசாய் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பரோடா அணி 2-வது இன்னிங்சில் 97 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோத்னில் சிங் 136 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 71 ஓவர்களில் 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக கவுரி சங்கர் 79 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பரோடா அணி 3 புள்ளிகள் பெற்றது. தமிழக அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.

Next Story