இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி திரும்புவது என்பது கடினமானதாகும் - கபில்தேவ்


இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி திரும்புவது என்பது கடினமானதாகும் - கபில்தேவ்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:22 PM GMT (Updated: 3 Feb 2020 11:22 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி திரும்புவது என்பது கடினமானதாகும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.


* நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பாதியில் காயம் அடைந்து வெளியேறியதால் அதன் பிறகு கேப்டன் பொறுப்பை கவனித்த லோகேஷ் ராகுல் வெற்றிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்தது சிறப்பான உணர்வாகும். நாட்டுக்காக விளையாடுவது முதல் கனவு என்றால் அணியை வழிநடத்துவது என்பது 2-வது கனவாகும். ரோகித் சர்மா காயம் அடைந்தது எதிர்பாராததாகும். ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய பொறுப்பு அளிக்கப்படுகிறது. எனக்கு அளிக்கப்படும் சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ரோகித் சர்மா, விராட்கோலி இல்லாத நிலையிலும் நாங்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இருவரும் உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர்கள். இந்த ஆண்டில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. அந்த போட்டிக்காக தயாராக அதிகமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று கூறினார்.

* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி திரும்புவது என்பது கடினமானதாகும். நீண்ட காலம் நீங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் அணிக்கு எப்படி திரும்ப முடியும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஐ.பி.எல். போட்டி வர இருக்கிறது. அதில் டோனியின் பார்ம் மிகவும் முக்கியமானது. அணியின் நலனுக்கு எது? நல்லது என்பதை தேர்வாளர்கள் பார்க்க வேண்டும். டோனி நாட்டுக்காக நிறைய சாதனைகளை படைத்து இருக்கிறார். 6-7 மாதம் விளையாடவில்லை என்றாலே உங்களை குறித்த சந்தேகம் எல்லோருடைய மனதிலும் ஏற்படும். அதன் பிறகு நிறைய விவாதங்கள் கிளம்பும். அதுபோல் நடக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போதைய இந்திய அணி சிறப்பானதாக உள்ளது. உலகில் உள்ள எல்லாவிதமான சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி இந்திய பவுலர்கள் பந்து வீசுகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக செயல்படுகிறார்கள். வெளிநாட்டு மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பான திறமை கொண்டவர்கள். நியூசிலாந்து போட்டி தொடர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவும்’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது டுவிட்டர் பதிவில், ‘நியூசிலாந்து தொடரில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி செயல்படும் விதம் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி செயல்பட்ட விதத்தை எனக்கு நினைவூட்டுகிறது. போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி தன்னம்பிக்கையுடன் வெற்றிக்கு வழி தேட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும். அப்படி தற்போதைய இந்திய அணியும் செயல்படுகிறது. அதுபோல் செயல்பட வலுவான தன்னம்பிக்கை இருந்தால் தான் முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு வலைத்தள பக்கத்துக்கு அளித்த பேட்டியில், ‘டோனியின் செயல்பாடுகள் எல்லாமே இயல்பானதாகும். அது களத்தில் அவர் நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. தற்போது அவர் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்பதை நாம் பார்க்கிறோம். அவர் மூன்று ஐ.சி.சி. கோப்பை மற்றும் நிறைய ஐ.பி.எல். பட்டங்களை வென்று கொடுத்து இருக்கிறார். இந்தியா பார்த்ததிலேயே டோனி தான் சிறந்த கேப்டன். இதற்கு காரணம் இருக்கிறது. அவர் நெருக்கடியான தருணங்களில் அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படக்கூடியவர். இளம் பந்து வீச்சாளர்கள் நெருக்கடியில் இருக்கும் போது டோனி எப்படி அவர்களை கையாள்வார் என்பதை பார்த்து இருக்கிறேன். நேராக பவுலரிடம் சென்று அவர் தோளில் கைபோட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார். அணியின் மூத்த வீரர் ஒருவர் இளம் வீரரை அப்படி நடத்தும் போது அவருக்கு தன்னம்பிக்கை கிடைப்பதுடன் அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குனருமான ஜாகீர்கான் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு களம் திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இதனை நான் எனது அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். காயத்தில் இருந்து திரும்புகையில் நாம் எந்த மாதிரியான நிலையில் திரும்ப வருகிறோம் என்பது தான் முக்கியம். காயத்துக்கு சிகிச்சை பெறுகையில் டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட், டிரெய்னர் சொல்லும் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story