பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் தோல்வி


பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 7 Feb 2020 10:45 PM GMT (Updated: 7 Feb 2020 8:04 PM GMT)

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதில் மெல்போர்னில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மந்தனா 45 ரன்கள் (40 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அன்யா ஸ்ருப்சோல் 3 விக்கெட்டும், கேத்தரின் புருன்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நதாலி சிவெர் அரைசதம் (50 ரன், 38 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டும், ராதா யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஸ்ருப்சோல் ஆட்டநாயகி விருது பெற்றார். முந்தைய லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு இருந்த இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

மெல்போர்னில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும். இதில் தோல்வி அடைந்தால் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விடும்.

Next Story