நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது


நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 Feb 2020 11:45 PM GMT (Updated: 7 Feb 2020 8:23 PM GMT)

இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.

இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இந்திய அணியினர் பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.

தொடக்க ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் ஸ்ரேயாஸ் அய்யரின் செஞ்சுரி (103 ரன்), கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் இந்தியா 347 ரன்கள் குவித்தது. ஆனால் பந்து வீச்சில் சொதப்பி விட்டனர். இந்த இமாலய இலக்கை நியூசிலாந்து 11 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. அந்த அணியிலும் ஒரு சதம் (ராஸ் டெய்லர்), 2 அரைசதங்கள் (நிகோல்ஸ், டாம் லாதம்) பதிவாகின. 34 முதல் 41 ஓவர்கள் இடைவெளியில் இந்திய பவுலர்கள் மொத்தம் 111 ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டியது அவசியமாகும். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 84 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படலாம்.

இந்த மைதானமும் சிறியது தான். குறிப்பாக நேர்பகுதி பவுண்டரி தூரம் 56 மீட்டர் மட்டுமே கொண்டது. அதனால் பந்தை கணித்து விளையாடினால் ரன் வேட்டை நடத்தலாம்.

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன்பு இரண்டு முறை ஒரு நாள் தொடரை வசப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் அங்கு தொடரின் முதல் ஆட்டத்தில் தோற்று அதன் பிறகு மீண்டு வந்ததில்லை. அந்த வரலாற்றை நமது அணி மாற்றி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போதைய பயணத்தில் இந்திய அணி தனது முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தை இதே ஆக்லாந்தில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றது. அதில் ஒரு ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்து மிரட்டியது. இது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோரும் காயத்தால் ஓய்வில் உள்ளனர். ஆனாலும் சாதுர்யமாக சமாளித்து முதலாவது ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை துரத்திப்பிடித்ததால் நியூசிலாந்து வீரர்கள் உற்சாகமுடன் களம் காணுவார்கள்.

அந்த அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சை எங்களது வீரர்கள் சிறப்பாக கையாண்டனர். இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இது முற்றிலும் வித்தியாசமான சூழல். இங்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக சுழற்பந்து வீச்சு மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

இந்த மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி இங்கு 9 ஆட்டத்தில் விளையாடி 4-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமன் ஆனது.

கடைசியாக இங்கு நடந்த 12 ஆட்டங்களில் 8-ல் இரண்டாவது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் ‘டாஸ்’ வெல்லும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், டாம் லாதம் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், ஸ்காட் குஜ்ஜெலின் அல்லது ஹாமிஷ் பென்னட், டிம் சவுதி.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

‘கடினமான சூழலை விரும்புகிறோம்’

இந்திய அணி கடந்த டிசம்பரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் தோற்று பிறகு மீண்டெழுந்து அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதை குறிப்பிட்டு பேசிய இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், ‘தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கிய சூழலை ஏற்கனவே சந்தித்து எழுச்சி பெற்ற அனுபவம் எங்களுக்கு உண்டு. இத்தகைய கடினமான சூழலை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் நெருக்கடிக்கு மத்தியில் எப்போதும் நன்றாக ஆடியுள்ளோம்’ என்றார்.

Next Story