பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா


பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 8 Feb 2020 11:23 PM GMT (Updated: 8 Feb 2020 11:23 PM GMT)

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. மெல்போர்னில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. ஆஷ்லிக் கார்ட்னெர் 93 ரன்கள் (57 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஆரம்பம் முதலே அடித்து ஆடியதுடன் வலுவான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஷபாலி வர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 49 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்னும், மற்றொரு தொடக்க வீராங்கனை மந்தனா 48 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 55 ரன்களும் நொறுக்கினர்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்னுடனும், தீப்தி ஷர்மா 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச சேசிங் (இலக்கை எட்டிப்பிடிப்பது) இதுவாகும்.

4-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பிலும் இந்தியா நீடிக்கிறது.

மெல்போர்னில் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் சந்திக்கின்றன. இந்திய நேரப்படி காலை 6.10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். மாறாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்-ரேட்டில் முன்னிலை வகிக்கும் டாப்-2 அணிகளுக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் கிட்டும்.

Next Story