நலநிதி கிரிக்கெட் போட்டியில் பாண்டிங் அணி வெற்றி: தெண்டுல்கரும் ஒரு ஓவர் ஆடினார்


நலநிதி கிரிக்கெட் போட்டியில் பாண்டிங் அணி வெற்றி: தெண்டுல்கரும் ஒரு ஓவர் ஆடினார்
x
தினத்தந்தி 10 Feb 2020 1:06 AM GMT (Updated: 10 Feb 2020 1:06 AM GMT)

மெல்போர்னில் நடந்த நலநிதி கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாண்டிங் அணி வெற்றி பெற்றது. சச்சின் தெண்டுல்கரும் ஜாலியாக ஒரு ஓவர் விளையாடி உற்சாகப்படுத்தினார்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் பரவிய காட்டுத்தீயினால் உயிர்சேதமும், பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது.

இந்த போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் அடங்கிய கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதின.

இதில் முதலில் பேட் செய்த பாண்டிங் லெவன் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 104 ரன்கள் திரட்டியது. பிரமாதமான 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய பிரையன் லாரா 30 ரன்களுடன் (11 பந்து) ரிட்டயர்ட்ஹர்ட் ஆகி வெளியேறினார். கேப்டன் பாண்டிங் 26 ரன்களும், ஹைடன் 16 ரன்களும் எடுத்தனர். கில்கிறிஸ்ட் அணியில் யுவராஜ்சிங் உள்பட 8 வீரர்கள் பவுலிங் செய்தனர்.

அடுத்து களம் இறங்கிய கில்கிறிஸ்ட் லெவன் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடி காட்டிய ஷேன் வாட்சனும் (30 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்), சைமன்ட்சும் (29 ரன், 3 பவுண்டரி, 2 சிக்சர்) மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் வெளியேறினர்.

கில்கிறிஸ்ட் 17 ரன்னிலும், யுவராஜ்சிங் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது, 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் மூன்று நோ-பால் எக்ஸ்டிராவும் அடங்கும்.

பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இன்னிங்ஸ் இடையே ஒரு ஓவர் விளையாடினார். அதாவது ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரி, நலநிதி திரட்டுவதற்கு நான் ஒரு ஓவர் பந்துவீசுகிறேன் அதை எதிர்கொள்ளத் தயாரா? என்று சவால் விட்டிருந்தார். அதை ஏற்றுக் கொண்ட தெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக இனி பேட்டிங் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்திய நிலையிலும் நல்ல விஷயத்துக்காக களம் இறங்குகிறேன் என்று கூறியிருந்தார்.

இதன்படி மஞ்சள் சீருடை சகிதமாக தெண்டுல்கர் பேட்டிங் செய்ய களம் கண்டார். எலிஸ் பெர்ரி பவுலிங் செய்ய, வீராங்கனைகளே பீல்டிங்கில் நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 5½ ஆண்டுகளுக்கு பிறகு களத்தில் மட்டையை பிடித்த தெண்டுல்கர் முதல் பந்தை ‘பைன் லெக்’ திசையில் அடித்தார். பீல்டரின் கையில் சிக்காமல் பந்து பவுண்டரிக்கு ஓடியது. தெண்டுல்கர் ஓங்கி அடிக்காமல் மிதவேகத்திலேயே பந்துகளை தட்டிவிட்டார். முதல் 4 பந்துகளை எலிஸ் பெர்ரியும், கடைசி 2 பந்துகளை அனாபெல் சுதர்லாண்டும் வீசினர்.

‘பந்தை சரியாக கணித்து பேட்டால் அடிக்க முடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதனால் ‘பெர்ரியை விட நான் தான் பதற்றத்தில் இருந்தேன்’ என்று தெண்டுல்கர் குறிப்பிட்டார்.

Next Story