கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது + "||" + Against New Zealand One-day cricket The last game is going on today

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது.
மவுன்ட்மாங்கானு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.


இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

முதல் 2 போட்டிகளில் கண்ட தோல்விக்கு ஆறுதல் தேடும் வகையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. 2-வது போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். அவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக களம் காணும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். அதனை அவர்கள் சரியாக செய்தால் இந்திய அணி எழுச்சி பெறும்.

ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 155 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் தொடர்ந்து சிறந்த நிலையில் உள்ளார். லோகேஷ் ராகுல் (92 ரன்கள்), கேப்டன் விராட்கோலி (66 ரன்கள்) ஆகியோரின் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பேட்டிங் சொதப்பலை சரிக்கட்ட இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை களம் இறக்கப்படாத ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பந்து வீச்சாளர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு எடுபடவில்லை. அவர் கடந்த 2 போட்டியில் 20 ஓவர்கள் பந்து வீசி 117 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அவருக்கு பதிலாக முகமது ஷமி களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து அணி 20 ஓவர் போட்டி தொடரை முழுமையாக இழந்ததை சரிக்கட்டும் வகையில் ஒருநாள் தொடரை முழுமையாக வெல்ல முனைப்பு காட்டும். தோள்பட்டை காயம் காரணமாக முந்தைய போட்டிகளில் விளையாடாத கேப்டன் கேன் வில்லியம்சன் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பதால் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு மற்றும் காயம் ஏற்பட்டு இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர் சோதி, வேகப்பந்து வீச்சாளர் பிளைர் டிக்னெர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 182 ரன்கள் குவித்துள்ளார். ஹென்றி நிகோல்ஸ், மார்ட்டின் கப்தில், டாம் லாதம் ஆகியோரும் பக்கபலமாக விளங்கி வருகிறார்கள். பந்து வீச்சில் டிம் சவுதி, காலின் டி கிரான்ட்ஹோம், கைல் ஜாமிசன், ஹாமிஷ் பென்னட் ஆகியோர் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

தொடரை முழுமையாக வெல்ல நியூசிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியை ருசிக்க இந்திய அணியும் போராடும். இந்த மைதானத்தில் 2 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளும் இன்று மோதுவது 110-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 போட்டிகளில் இந்திய அணி 55 ஆட்டத்திலும், நியூசிலாந்து அணி 48 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஒரு ஆட்டம் டை ஆனது.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் அல்லது ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே அல்லது ஷிவம் துபே, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, முகமது ஷமி அல்லது ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், டிம் சவுதி, கைல் ஜாமிசன், சோதி அல்லது மிட்செல் சான்ட்னெர், ஹாமிஷ் பென்னட் அல்லது ஸ்காட் குஜ்ஜெலின்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இருந்து பாபர் அசாம் விலகல்
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு நடக்கிறது.