கிரிக்கெட்

சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 250 ரன்கள் சேர்ப்பு + "||" + Against Saurashtra Ranji Cricket Tamil Nadu added 250 runs

சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 250 ரன்கள் சேர்ப்பு

சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 250 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 250 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜ்கோட்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. தமிழக அணி, ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியை (பி பிரிவு) ராஜ்கோட்டில் சந்தித்தது. கால்இறுதி வாய்ப்பை வசப்படுத்த கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன், டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக அபினவ் முகுந்த் 86 ரன்களும் (112 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 61 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். கேப்டன் பாபா அபராஜித் 20 ரன்னில் கேட்ச் ஆனார்.


சவுராஷ்டிரா தரப்பில் உனட்கட் 3 விக்கெட்டுகளும், சிராக் ஜானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அந்த அணியின் பவுலர்கள் மொத்தம் 20 ஓவர்களை மெய்டனாக வீசியது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் தொடங்கிய மிசோரமுக்கு எதிரான ஆட்டத்தில் (பிளேட் பிரிவு) களம் இறங்கிய கோவா அணி பேட்ஸ்மேன்கள் ஒரு நாள் போட்டி போன்று அதிரடியில் வெளுத்து கட்டினர். விக்கெட் கீப்பர் சுமித் பட்டேல் இரட்டை சதமும் (236 ரன், 195 பந்து, 28 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் அமித் வர்மா 148 ரன்களும் (123 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினர். கோவா அணி முதல் இன்னிங்சில் 77.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 490 ரன்கள் (ரன்ரேட் 6.29) குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மிசோரம் அணி 9 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மிசோரம் அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன் எடுத்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கிய கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் (‘பி’ பிரிவு) பரோடா அணி முதல் இன்னிங்சில் 33.5 ஓவர்களில் வெறும் 85 ரன்னில் சுருண்டது. அகமதுநூர் பதான் (45 ரன்), தீபக் ஹூடா (20) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். கேப்டன் குருணல் பாண்ட்யா டக்-அவுட் ஆனார். கர்நாடகா தரப்பில் அபிமன்யு மிதுன், கிருஷ்ணப்பா கவுதம் தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய உள்ளூர் அணியான கர்நாடகாவும் தடுமாறத் தான் செய்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கருண் நாயர் 47 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முதலில் பேட் செய்த மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 352 ரன்கள் சேர்த்துள்ளது. அறிமுக வீரர் ஆகார்ஷித் கோமெல் 122 ரன்களும், சர்ப்ராஸ் கான் ஆட்டம் இழக்காமல் 169 ரன்களும் (22 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஏற்கனவே உத்தரபிரதேசத்துக்கு எதிராக முச்சதமும், இமாச்சலபிரதேசத்துக்கு எதிராக இரட்டை சதமும் நொறுக்கிய சர்ப்ராஸ் கான், மீண்டும் ஒரு முறை மூன்று இலக்கத்தை எட்டி அசத்தியிருக்கிறார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.