ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், பும்ரா


ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், பும்ரா
x
தினத்தந்தி 12 Feb 2020 11:58 PM GMT (Updated: 12 Feb 2020 11:58 PM GMT)

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பவுலிங் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளார்.

துபாய்,

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் மூன்று ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த இந்திய அணி 31 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒயிட்வாஷ்’ என்ற அவச்சாதனையை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து தொடரில் 3 ஆட்டத்தில் 75 ரன் மட்டுமே எடுத்து சோபிக்காத கோலி 17 தரவரிசை புள்ளிகளை இழந்துள்ளார். ஆனாலும் 869 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும் (829 புள்ளி), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 4-வது இடத்திலும் (828 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் 5-வது இடத்திலும் (803 புள்ளி) இருக்கிறார். 6, 7, 8-வது இடங்களில் முறையே டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) தொடருகிறார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 18 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தை பிடித்துள்ளார். ஷிகர் தவான் 19-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் 62-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அந்த அரியணையை இழந்துள்ளார்.

நியூசிலாந்து ஒரு நாள் தொடரில் அவர் 3 ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 30 ஓவர்கள் பந்து வீசி 167 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளாரே தவிர ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் தொடர் ஒன்றில் விக்கெட் ஏதும் எடுக்காதது இதுவே முதல் நிகழ்வாகும். இதனால் 45 புள்ளிகளை இழந்துள்ள பும்ரா 719 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காயத்தால் இந்திய தொடரில் ஆடாத நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் (727 புள்ளி) தானாகவே முதலிட அந்தஸ்தை எட்டினார். ஆப்கானிஸ்தானின் முஜீப் ரகுமான் 3-வது இடமும் (701 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 4-வது இடமும் (674 புள்ளி), ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5-வது இடமும் (673 புள்ளி) வகிக்கிறார்கள். இந்திய பவுலர்கள் யுஸ்வேந்திர சாஹல் 13-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 21-வது இடத்திலும், முகமது ஷமி 23-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முகமது நபி (ஆப்கானிஸ்தான்) முதலிடத்திலும், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 2-வது இடத்திலும், இமாத் வாசிம் (பாகிஸ்தான்) 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 10-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

Next Story