தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் தோல்வி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு ரன்னில் தோல்வி
x
தினத்தந்தி 14 Feb 2020 12:14 AM GMT (Updated: 14 Feb 2020 12:14 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

ஈஸ்ட் லண்டன்,

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பவுமா 43 ரன்களும், கேப்டன் குயின்டான் டி காக், வான்டர் துஸ்சென் தலா 31 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் (70 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் இயான் மோர்கன் (52 ரன், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசியதால் வெற்றியை நெருங்கியது.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நிகிடி வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த டாம் கர்ரன் அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். 3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தில் 2 ரன் எடுத்த மொயீன் அலி அடுத்த பந்தில் சிக்கினார். இதையடுத்து கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது ரன்னுக்காக ஓடுகையில் அடில் ரஷித் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், பெலக்வாயோ, பீரன் ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டும், ஸ்டெயின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி டர்பனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story