ரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவிப்பு


ரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 12:19 AM GMT (Updated: 14 Feb 2020 12:19 AM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் ஜெகதீசனின் அபார சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவித்தது.

ராஜ்கோட்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பின்வரிசை வீரர்களின் துணையுடன் ஜெகதீசன் அமர்க்களப்படுத்தினார். அபாரமாக ஆடிய அவர் 4-வது முதல்தர போட்டி சதத்தை நிறைவு செய்ததோடு, அணி 400 ரன்களை கடக்கவும் வித்திட்டார். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 128.4 ஓவர்களில் 424 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஜெகதீசன் 183 ரன்கள் (256 பந்து, 22 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். முகமது 42 ரன்களும் (121 பந்து, 7 பவுண்டரி), கே.விக்னேஷ் 5 ரன்னும் (15 பந்து) எடுத்தனர். சவுராஷ்டிரா தரப்பில் கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மத்திய பிரதேசத்துக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) மும்பை அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. சர்ப்ராஸ் கான் 177 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய மத்தியபிரதேச அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் பரோடாவுக்கு (பி பிரிவு) எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் ஸ்கோருடன் (165-7 ரன்) நேற்று தொடர்ந்து விளையாடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களில் அடங்கியது. அடுத்து 148 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து 60 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடந்த (பிளேட் பிரிவு) மிசோரமுக்கு எதிரான ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த கோவா அணி ஒரே நாளில் 4 விக்கெட்டுக்கு 490 ரன்கள் குவித்து (டிக்ளேர்) மலைக்க வைத்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மிசோரம் அணி 109 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனதால் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடி அதிலும் 170 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் கே.பி.பவான் சதம் (111 ரன்) அடித்தும் சரிவில் இருந்து மீள முடியாமல் போய் விட்டது. இதன் மூலம் கோவா அணி இன்னிங்ஸ் மற்றும் 211 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது நாளிலேயே வெற்றியை சுவைத்ததோடு, 7 புள்ளிகளையும் தட்டிச் சென்றது. இந்த பிரிவில் முதலிடத்தை பிடித்த கோவா அணி (9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 டிராவுடன் 50 புள்ளி) கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் அடுத்த சீசனில் சி பிரிவுக்கு கோவா அணி தரம் உயர்த்தப்படுகிறது.

Next Story