டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை...


டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை...
x
தினத்தந்தி 18 Feb 2020 11:50 PM GMT (Updated: 18 Feb 2020 11:50 PM GMT)

நியூசிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு வெலிங்டனில் தொடங்குகிறது.

வெலிங்டன்,

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் இதுவரை 9 டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்கிறது. அவற்றின் முடிவு, சாதனைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:-

மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையில் நியூசிலாந்துக்கு முதல்முறையாக பயணித்த இந்திய கிரிக்கெட் அணி அங்குள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை சீக்கிரமாகவே மாற்றிக்கொண்டு பிரமாதமாக விளையாடினர். டுனெடினில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்திய அணி 200 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்நிய மண்ணில் இந்தியா ருசித்த முதல் வெற்றியாக இது பதிவானது. 2-வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் எரப்பள்ளி பிரசன்னா 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த 2-வது டெஸ்டில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து வெலிங்டன், ஆக்லாந்தில் நடந்த டெஸ்டு களில் வாகை சூடிய இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்த தொடரில் ஹீரோவாக ஜொலித்த இந்திய வீரர் அஜித் வடேகர் ஒரு சதம் உள்பட 328 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பு வடேகருக்கு கிடைத்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் எரப்பள்ளி பிரசன்னா (24 விக்கெட்), பிஷங்சிங் பெடி (16 விக்கெட்) ஆகியோரும் இந்த தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஒவ்வொரு டெஸ்டும் 6 நாள் கொண்டதாக நடத்தப்பட்டது. அதாவது இடையே ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டது.

சுனில் கவாஸ்கர் தலைமையில் நியூசிலாந்துக்கு சென்றிருந்த இந்திய அணி இந்த முறை தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் ஆக்லாந்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும், அதில் 2-வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் எரப்பள்ளி பிரசன்னா 76 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளியதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த நாள் வரைக்கும் வெளிநாட்டு மண்ணில் இது தான் இந்திய பவுலரின் சிறந்த பந்து வீச்சாக நீடிக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நியூசிலாந்தின் கனவு இந்த முறை நனவானது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஞ்சிய இரு டெஸ்டுகளை இந்தியா போராடி டிரா செய்தது. இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங் முற்றிலும் சொதப்பியது. கேப்டன் சுனில் கவாஸ்கர், வெங்சர்க்கார், கிர்மானி, சந்தீப் பட்டீல், குண்டப்பா விஸ்வநாத், ரவிசாஸ்திரி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்தும் இந்திய தரப்பில் ஒரு சதம் கூட அடிக்கப்படவில்லை.

முந்தைய பயணத்தை போன்றே இந்த முறையும் நியூசிலாந்து அணி முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இதில் ஆக்லாந்தில் நடந்த 3-வது டெஸ்டில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி நன்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் முதலாவது இன்னிங்சில் 9-வது வரிசையில் இறங்கிய நியூசிலாந்து விக்கெட் கீப்பர் இயன் சுமித் 136 பந்துகளில் 173 ரன்கள் விளாசி தங்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றி விட்டார். அந்த சமயத்தில் 9-வது வரிசையில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இது இருந்தது.

ஹாமில்டனில் நடந்த இந்த ஒரே டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. நியூசிலாந்து அணியில் ஸ்டீபன் பிளமிங் அறிமுக வீரராக இறங்கினார். இரு இன்னிங்சையும் சேர்த்து 2 விக்கெட் மட்டுமே எடுத்த இந்திய ஜாம்பவான் கபில்தேவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இது அமைந்தது.

இது 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலாவது டெஸ்ட் பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டதால் 2 போட்டி கொண்ட தொடராக மாறியது.

வெலிங்டனில் நடந்த போட்டியில் முதலாவது இன்னிங்சில் கேப்டன் முகமது அசாருதீனும், 2-வது இன்னிங்சில் சச்சின் தெண்டுல்கரும் செஞ்சுரி அடித்தும் பலன் இல்லை. 213 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து எட்டிப்பிடித்தது. இதைத் தொடர்ந்து ஹாமில்டனில் நடந்த அடுத்த டெஸ்ட் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. இரு இன்னிங்சிலும் ராகுல் டிராவிட் (190 ரன், 103 ரன்) சதம் அடித்து ஹீரோவாக உருவெடுத்தார். நியூசிலாந்து மண்ணில் ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட ஒரே இந்தியர் டிராவிட் தான். இந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் சவுரவ் கங்குலியும் (101 ரன், நாட்-அவுட்) சதத்தை எட்டியது இன்னொரு சிறப்பம்சமாகும்

நியூசிலாந்து பயணத்திலேயே இந்தியாவின் மிக மோசமான செயல்பாட்டை இந்த தொடரில் தான் பார்க்க முடிந்தது. 161, 121, 99, 154 ரன்.... இது தான் ஒட்டுமொத்த இந்திய அணியினரும் ஒவ்வொரு இன்னிங்சிலும் எடுத்த ஸ்கோராகும். சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஷேவாக், கேப்டன் சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் என்று தலைச்சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் முன்பு பாய்ச்சா பலிக்கவில்லை.

டோனி தலைமையில் நியூசிலாந்துக்குள் படையெடுத்த இந்திய அணியினர் அங்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் முதல் வெற்றியை பெற்று கவனத்தை ஈர்த்தனர். ஹாமில்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் சச்சின் தெண்டுல்கரின் (160 ரன்) சதத்தின் உதவியோடு இந்தியா முதல் இன்னிங்சில் 520 ரன்களை திரட்டியது. நியூசிலாந்து அணி இரண்டு இன்னிங்சிலும் தலா 279 ரன்கள் வீதம் எடுத்தது. பின்னர் 39 ரன்கள் இலக்கை இந்தியா விக்கெட் இழப்பின்றி எடுத்து சரித்திரம் படைத்தது. எஞ்சிய இரு டெஸ்டும் டிராவில் முடிந்தது. இதில் நேப்பியரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி பாலோ-ஆன் ஆகி 314 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய போது தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கவுதம் கம்பீர் 10 மணி 43 நிமிடங்கள் போராடியதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரது வியப்பூட்டும் தடுப்பாட்டத்தின் பலனாக (436 பந்தில் 137 ரன்) அந்த டெஸ்டில் இந்தியா தோல்வியின் பிடியில் இருந்து தப்பித்தது. இந்த தொடரில் ரன் குவிப்பில் கவுதம் கம்பீரும் (449 ரன்), விக்கெட் வேட்டையில் ஹர்பஜன்சிங்கும் (16 விக்கெட்) முதலிடம் பிடித்தனர்.

டோனி தலைமையிலான இந்திய அணி இந்த தடவை தொடரை 0-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது. ஆக்லாந்தில் நடந்த தொடக்க டெஸ்டில் கேப்டன் பிரன்டன் மெக்கல்லத்தின் இரட்டை சதத்தின் (224 ரன்) துணையுடன் நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நடந்த அடுத்த டெஸ்ட் டிரா ஆனாலும், அதில் நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 2-வது இன்னிங்சில் முச்சதம் (302 ரன்) நொறுக்கியது குறிப்பிடத்தக்கது. முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மெக்கல்லம் பெற்றார். இந்திய தரப்பில் டிராவுக்கு வித்திட்ட விராட் கோலி 2-வது இன்னிங்சில் சதம் (105 ரன்) அடித்து ஆறுதல் அளித்தார்.

Next Story