அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - பிரக்யான் ஓஜா அறிவிப்பு


அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - பிரக்யான் ஓஜா அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 7:21 AM GMT (Updated: 21 Feb 2020 10:16 PM GMT)

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக பிரக்யான் ஓஜா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். தெண்டுல்கர் ஓய்வு பெற்ற அந்த போட்டியில் பிரக்யான் ஓஜா மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன் பிறகு பிரக்யான் ஓஜாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 33 வயதான ஓஜா அனைத்து வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘சர்வதேசம் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய வீரர்களின் கனவாகும். அந்த கனவை நான் இளம் வயதிலேயே எட்டியது மகிழ்ச்சி அளித்தது. அந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் முன்பு தெண்டுல்கரிடம் இருந்து அணிக்குரிய தொப்பியை பெற்றதும், டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த வகையில் தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிரக்யான் ஓஜா 24 டெஸ்ட் போட்டியில் 113 விக்கெட்டும், 18 ஒருநாள் போட்டியில் 21 விக்கெட்டும், 6 இருபது ஓவர் போட்டியில் 10 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

Next Story