பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 23 Feb 2020 12:02 AM GMT (Updated: 23 Feb 2020 12:02 AM GMT)

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டங்களில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சுலபமாக வெற்றி பெற்றன.

பெர்த்,

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் பெர்த்தில் நேற்று நடந்த ஒரு லீக்கில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி பவர்- பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் திரட்டியது. ஆனால் மிடில் வரிசையில் சொதப்பியதால் ரன்வேகம் தடம் புரண்டது. 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனையான கேப்டன் சமாரி அட்டப்பட்டு 41 ரன்கள் (30 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிக்கனத்தை காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஹைய்லி ஜென்சன் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சோபி டேவின் 75 ரன்கள் (55 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) நொறுக்கினார்.

மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அறிமுக அணியான தாய்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. விக்கெட் கீப்பர் கொஞ்சரோங்கா (33 ரன்), நருமோல் சாய்வாய் (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இந்த எளிய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் (3 விக்கெட் மற்றும் 26 ரன்) ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று நடக்கும் 4-வது லீக்கில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் (மாலை 4.30 மணி) சந்திக்கின்றன.


Next Story