கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆஸ்திரேலியா + "||" + Australia T20 Cricket: South Africa rolled over

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆஸ்திரேலியா

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆஸ்திரேலியா
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை 89 ரன்னில் சுருட்டி அசத்தியது. சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
ஜோகன்னஸ்பர்க்,

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 45 ரன்னும் (32 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 42 ரன்னும் (27 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஆஷ்டன் அகர் 20 ரன்னுடனும் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), மிட்செல் ஸ்டார்க் 7 ரன்னுடனும் (3 பந்து, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் திண்டாடியது. 14.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்க அணி 14.3 ஓவர்களில் 89 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது.

20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 8-வது வெற்றியை ருசித்ததுடன், தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

8-வது ஓவரை வீசிய ஆஸ்திரேலிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 4-வது பந்தில் டுபிளிஸ்சிஸ் (24 ரன்), 5-வது பந்தில் பெலக்வாயோ, 6-வது பந்தில் ஸ்டெயின் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். மொத்தம் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட 13-வது ‘ஹாட்ரிக்’ இதுவாகும். மேலும் 20 ஓவர் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் ஆவார். ஏற்கனவே (2007-ம் ஆண்டு) பிரெட்லீ இந்த சாதனையை படைத்து இருந்தார்.

20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் (89 ரன்கள்) இதுவாகும். அத்துடன் ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி சந்தித்த பெரிய தோல்வியும் இதுவாகும். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.