கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி படுதோல்வி + "||" + First Test cricket: New Zealand won by 10 wickets

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி படுதோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி படுதோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
வெலிங்டன்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்னும், ராஸ் டெய்லர் 44 ரன்னும், கைல் ஜாமிசன் 44 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து இருந்தது. ரஹானே 25 ரன்னுடனும், ஹனுமா விஹாரி 15 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ரஹானே 29 ரன்னிலும், ஹனுமா விஹாரி 15 ரன்னிலும், ஆர்.அஸ்வின் 4 ரன்னிலும், இஷாந்த் ஷர்மா 12 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 25 ரன்னிலும், ஜஸ்பிரித் பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆட்டம் தொடங்கிய 16 ஓவர்களுக்குள் எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் 47 ரன்னில் இழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 81 ஓவர்களில் 191 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 9 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், காலின் டி கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 1.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது நியூசிலாந்து அணியின் 100-வது வெற்றியாகும். டாம் லாதம் 7 ரன்னுடனும், டாம் பிளன்டெல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தோல்வி

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு 14 மாதங்கள் கழித்து இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் முதல் நடந்து வரும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் (2-0), தென்ஆப்பிரிக்கா (3-0), வங்காளதேசம் (2-0) ஆகியவற்றுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி 7 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 8-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்தித்த இந்திய அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 360 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி (296 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (146 புள்ளிகள்) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (140 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (120 புள்ளிகள்) 5-வது இடத்திலும் உள்ளன.