பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றி


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 24 Feb 2020 11:38 PM GMT (Updated: 24 Feb 2020 11:38 PM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

பெர்த்,

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெர்த்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமரி ஜெயன்கானி 50 ரன்கள் சேர்த்தார். பின்னர் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ராச்செல் ஹெய்ன்ஸ், கேப்டன் மெக் லானிங்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அடித்து ஆடிய ராச்செல் ஹெய்ன்ஸ் 60 ரன்னில் (47 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்து வெளியேறினார். 19.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக் லானிங் 41 ரன்னுடனும் (44 பந்து, 4 பவுண்டரி), எலிசி பெர்ரி 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய வீராங்கனை ராச்செல் ஹெய்ன்ஸ் ஆட்டநாயகி விருது பெற்றார். 2-வது ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

Next Story