ஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள் சேர்ப்பு


ஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 11:45 PM GMT (Updated: 25 Feb 2020 11:45 PM GMT)

உலக லெவன் அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆசிய லெவன் அணியில் கோலி, பண்ட், ராகுல் உள்பட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டாக்கா,

வங்காளதேச நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், அந்த நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரகுமானின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையே இரண்டு 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆட்டத்தை அடுத்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் டாக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விராட் கோலி உள்பட இந்திய முன்னணி வீரர்களை ஆசிய லெவன் அணியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு வீரர்களின் பட்டியலை அனுப்பியது.

இந்த நிலையில் ஆசிய மற்றும் உலக அணி வீரர்களின் பட்டியலை வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் நேற்று வெளியிட்டார்.

ஆசிய லெவன் அணியில் இந்திய தரப்பில் விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளன. இதில் கோலியும், ராகுலும் ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும், ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் நஸ்முல் ஹசன் தெரிவித்தார்.

விராட் கோலி தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவர் ஆசிய லெவன் அணிக்காக ஆடுவாரா? என்பது சந்தேகம் தான். அதாவது மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இந்திய அணி உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு 29-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட குறுகிய காலத்தில் ஆசிய லெவன்- உலக லெவன் போட்டி வருவதால் கோலி பணிச்சுமையை காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. தனது நிலைப்பாட்டை அவர் இன்னும் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கவில்லை.

ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். மார்ச் 22-ந்தேதி தான் இறுதிப்போட்டி நடக்கிறது. அதனால் தான் அவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்று நஸ்முல் ஹசன் விளக்கம் அளித்தார். அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-

ஆசிய லெவன் அணி: லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி (6 பேரும் இந்தியா), திசரா பெரேரா, மலிங்கா (இலங்கை), ரஷித்கான், முஜீப் ரகுமான் (ஆப்கானிஸ்தான்), முஸ்தாபிஜூர் ரகுமான், தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், மக்முதுல்லா (வங்காளதேசம்), சந்தீப் லமிச்சன்னே (நேபாளம்).

உலக லெவன் அணி: அலெக்ஸ் ஹாலெஸ், ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஷெல்டன் காட்ரெல் (வெஸ்ட் இண்டீஸ்), பிரன்டன் டெய்லர் (ஜிம்பாப்வே), பாப் டு பிளிஸ்சிஸ், நிகிடி (தென்ஆப்பிரிக்கா), ஆண்ட்ரூ டை (ஆஸ்திரேலியா), மிட்செல் மெக்லெனஹான் (நியூசிலாந்து).

Next Story