பெண்கள் ஜூனியர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சண்டிகார் வீராங்கனை கேஷ்வீ 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை


பெண்கள் ஜூனியர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சண்டிகார் வீராங்கனை கேஷ்வீ 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை
x
தினத்தந்தி 26 Feb 2020 12:15 AM GMT (Updated: 25 Feb 2020 11:46 PM GMT)

பெண்கள் ஜூனியர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சண்டிகார் வீராங்கனை கேஷ்வீ 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

கடப்பா, 

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான ஜூனியர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நடத்தப்பட்டு வருகிறது. இதில் அருணாச்சலபிரதேச மாநிலம் கடப்பாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சண்டிகார்-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சண்டிகார் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. கேஷ்வீ கவுதம் 49 ரன்கள் (68 பந்து) எடுத்தார். அடுத்து களம் இறங்கிய அருணாச்சலபிரதேச அணி வெறும் 25 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. சண்டிகார் கேப்டனும், வலக்கை மிதவேகப்பந்து வீச்சாளருமான கேஷ்வீ கவுதம் ‘ஹாட்ரிக்’ உள்பட 10 விக்கெட்டுகளையும் அறுவடை செய்து புதிய வரலாறு படைத்தார்.

எல்லா பந்துகளையும் ஸ்டம்பை குறிவைத்து போட்டு மிரட்டிய கேஷ்வீ 4.5 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்தார். 4 வீராங்கனைகள் போல்டு ஆனார்கள். 6 பேர் எல்.பி.டபிள்யூ.வில் சிக்கினர். குறுகிய வடிவிலான போட்டி (20 ஓவர் அல்லது ஒரு நாள் போட்டி) ஒன்றில் இந்தியர் ஒருவர் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் அள்ளுவது இதுவே முதல் நிகழ்வாகும். சர்வதேச போட்டி என்று பார்த்தால் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே, 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது நினைவிருக்கலாம்.

Next Story