கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + Test cricket against Zimbabwe: Bangladesh win by innings

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாக்கா, 

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 560 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் மொமினுல் ஹக் 132 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். முஷ்பிகுர் ரஹிம் 203 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

295 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி, வங்காளதேச வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முடிவில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 57.3 ஓவர்களில் 189 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் வங்காளதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் கிரேக் இர்வின் 43 ரன்னும், டிம்சென் மருமா 41 ரன்னும், சிக்கந்தர் ராசா 37 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர்கள் நயீம் ஹசன் 5 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டும் சாய்த்தனர். இரட்டை சதம் அடித்த வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. முதலாவது ஆட்டம் சைல்ஹெட்டில் மார்ச் 1-ந் தேதி நடக்கிறது.

ஆட்டநாயகன் விருது பெற்ற முஷ்பிகுர் ரஹிம் அளித்த பேட்டியில், ‘டிக்ளேர் செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது. 2 நாட்கள் மீதம் இருந்த நிலையில் மேலும் கொஞ்சம் பேட்டிங் செய்து இருந்தால் பிட்ச்சின் தன்மை இன்னும் மாற்றம் அடைந்து நமது பவுலர்களுக்கும் சாதகமாகி இருக்கும். தேனீர் இடைவேளையின் போது கூட டிக்ளேர் செய்வது குறித்து ஆலோசிக்கவில்லை. டிக்ளேர் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேட்டிங்கை அடுத்த நாளைக்கு தொடர்ந்து இருந்தால் எனக்கு முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும். லிட்டான் தாசும் சதம் அடித்து இருப்பார்’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணி வெற்றிபெற்றது.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
3. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார்.