ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை


ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
x
தினத்தந்தி 27 Feb 2020 12:01 AM GMT (Updated: 27 Feb 2020 12:01 AM GMT)

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

ஹம்பன்டோட்டா,

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியில் கேப்டன் கருணாரத்னே (1 ரன்), விக்கெட் கீப்பர் குசல் பெரேரா (0) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு அவிஷ்கா பெர்னாண்டோவும், குசல் மென்டிசும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். தங்களது 2-வது சதத்தை நிறைவு செய்த இவர்கள், 3-வது விக்கெட்டுக்கு 239 ரன்கள் திரட்டிய நிலையில் பிரிந்தனர். 3-வது விக்கெட்டுக்கு இலங்கை ஜோடி ஒன்றின் அதிகபட்சம் இதுவாகும். குசல் மென்டிஸ் 119 ரன்களிலும் (119 பந்து, 12 பவுண்டரி), அவிஷ்கா பெர்னாண்டோ 127 ரன்களிலும் (123 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 39.1 ஓவர்களில் 184 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த இலங்கை அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 1-ந்தேதி பல்லகெலேவில் நடக்கிறது.


Next Story