ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் மீண்டும் நியமனம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 27 Feb 2020 10:58 PM GMT (Updated: 27 Feb 2020 10:58 PM GMT)

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த சீசனுக்கான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு முதல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் டேவிட் வார்னர் 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் ஐதராபாத் அணி 2016-ம் ஆண்டில் கோப்பையை கைப்பற்றியது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய வார்னருக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்தது. இதனால் தடையின் போது அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் மற்றும் புவனேஷ்வர்குமார் கேப்டன் பொறுப்பை கவனித்தனர். கடந்த ஆண்டு (2019) டேவிட் வார்னர் அணியில் இடம் பிடித்து விளையாடினாலும், கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. தற்போது அவருக்கு மீண்டும் கேப்டன் பதவியை ஐதராபாத் அணி நிர்வாகம் வழங்கி இருக்கிறது.

ஐதராபாத் அணியின் கேப்டனாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து 33 வயதான டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி எனக்கு மீண்டும் கேப்டன் பதவி அளித்து இருப்பது வியப்பாக இருக்கிறது. மீண்டும் அணியை வழிநடத்த எனக்கு அளித்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக வில்லியம்சன், புவனேஷ்வர்குமார் ஆகியோர் அணியை வழிநடத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். ஐ.பி.எல். போட்டியில் இந்த ஆண்டு மீண்டும் ஐதராபாத் அணி கோப்பையை வெல்ல எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Next Story