கிரிக்கெட்

‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி + "||" + We have learned from failure and are ready for the challenge - Interview with Indian coach Ravi Shastri

‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

‘தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு சவாலுக்கு தயாராக உள்ளோம்’ - இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்டில் சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.


இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று நம்பலாம்.

முதலாவது டெஸ்டை பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி, புஜாராவின் பேட்டிங் சொதப்பல் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய அணி தலைநிமிர வேண்டும் என்றால் அவர்கள் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் ஏற்பட்ட வீக்கம் சரியாகி விட்டதால் அவர் களம் காண உள்ளார்.

அதே சமயம் இந்திய அணிக்கு பின்னடைவாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மீண்டும் வலது கணுக்கால் காயத்தில் சிக்கியிருக்கிறார். வலி அதிகமாக இருப்பதால் இந்த டெஸ்டில் அவர் விளையாடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது நவ்தீப் சைனி ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவார் என்றும் அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஷாந்த் ஷர்மா முதலாவது டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

புற்கள் நிறைந்த கிறைஸ்ட்சர்ச் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கே உகந்தது. டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர், கைல் ஜாமிசன் ஆகிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை வறுத்தெடுக்க காத்திருக்கிறார்கள். இவர்களின் தாக்குதலை நமது பேட்ஸ்மேன்கள் சமயோசிதமாக சமாளிப்பார்களா? அல்லது பணிந்து விடுவார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். 


இந்த போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தோல்வி பக்கமே செல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் போது, ‘இந்த வகையில் விளையாடினால் போதும்’ என்பது போல் உங்களது மனநிலையும் குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து விடும். அத்தகைய மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் வெலிங்டன் போட்டி போன்று அசைத்து பார்க்கக்கூடிய தோல்வி நமக்கு தேவையாகும். அதனால் இந்த தோல்வி நல்லது தான். தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நியூசிலாந்து பவுலர்கள் எத்தகைய யுக்திகளை பயன்படுத்தினார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். அதற்கு ஏற்ப, இப்போது எங்களது வீரர்கள் சவாலுக்கு தயாராக உள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 8 டெஸ்டுகளில் விளையாடி அதில் 7-ல் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளோம். அதனால் பதற்றமடைய தேவையில்லை. யாரும் அந்த கோணத்தில் அணியை பார்க்கவில்லை.

பெரும்பாலான அணிகள் வெளிநாட்டில் ஏன் டெஸ்டில் தடுமாறுகின்றன என்று கேட்கிறீர்கள். சிவப்பு பந்து தான் காரணம். சிவப்பு பந்திலும், வெள்ளை பந்திலும் விளையாடுவதில் முற்றிலும் வித்தியாசம் உள்ளன. இங்கிலாந்து, நியூசிலாந்து சீதோஷ்ண நிலையில் சிவப்பு பந்தில் ஆடுவது கடினம். எந்த ஒரு அணியும், அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள நாட்கள் பிடிக்கும். அதற்காக முதலாவது டெஸ்ட் தோல்விக்கு இதை காரணமாக சொல்லமாட்டேன். அவர்கள் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டனர் என்பதே உண்மை.

முதலாவது டெஸ்டில் கடைசி 3 விக்கெட்டுக்கு 123 ரன்களை விட்டுக்கொடுத்தோம். கடைசி கட்டத்தில் ரன்களை விட்டுக்கொடுப்பது எங்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. பின்வரிசை வீரர்களை கட்டுப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்துள்ளோம்.

இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேட்கிறீர்கள். முதலில் சுழற்பந்து வீச்சாளரின் பங்களிப்பு இங்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். எத்தனை ஓவர்கள் வீச வேண்டியது வரும் என்பதை யோசிக்க வேண்டும். 2-வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சு எடுபடுமா? அவரது பேட்டிங் முக்கியமானதா? பீல்டிங் முக்கியமானதா? அல்லது அவரது ஒட்டுமொத்த உடல்தகுதியையும் பரிசீலிக்க வேண்டுமா? என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து இருவரில் யாரை சேர்ப்பது என்பதை முடிவு செய்வோம்.

விக்கெட் கீப்பர்களில் விருத்திமான் சஹாவுக்கு பதிலாக ரிஷாப் பண்டுக்கு ஏன் முன்னுரிமை வழங்கினோம் என்றால், இந்திய ஆடுகளங்களில் பந்து அதிகமாக சுழன்று திரும்பும். சமசீரற்ற பவுன்ஸ் இருக்கும். இப்படிப்பட்ட ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்த சஹா தேவை. ஆனால் இங்கு சுழற்பந்து வீச்சின் தாக்கம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. வேகப்பந்து வீச்சும், பேட்டிங்கும் தான் பிரதானமாக இருக்கிறது. அது மட்டுமின்றி ரிஷாப் பண்ட் இடக்கை ஆட்டக்காரர். பின்வரிசையில் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். இவை தான் ரிஷாப் பண்டுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

பிரித்வி ஷா காயத்தில் இருந்து குணமடைந்து, 2-வது டெஸ்டில் விளையாட தயாராக இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்னிங்சில் 5 விக்கெட் அல்லது 6 விக்கெட் வீழ்த்தும் அளவுக்கு நெருங்கி இருக்கிறார். நாளையே (இன்று) இது நடக்கலாம். இதே போல் தான் முகமது ஷமியும். அவரது பந்து வீச்சு குறித்தும் கவலைப்பட தேவையில்லை என்று ரவிசாஸ்திரி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து மந்திரி சபையில் முதல் முறையாக இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இடம் !
நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
2. நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது
நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
3. நியூசிலாந்து மசூதிகளில் 51 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிக்கு சாகும்வரை சிறைத்தண்டனை - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
நியூசிலாந்து மசூதிகளில் 51 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்த நாட்டு கோர்ட்டு நேற்று வழங்கியது.
4. 2 மசூதிகளில் தொழுகையின் போது தாக்குதல் நடத்தியவனுக்கு நியூசிலாந்தின் அதிகபட்ச தண்டனை
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டாரண்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
5. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.