பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 2 March 2020 1:37 AM GMT (Updated: 2 March 2020 1:37 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

சிட்னி, 

10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

‘பி’ பிரிவில் சிட்னியில் நேற்று நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதின. மந்தமான இந்த ஆடுகளத்தில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது. லாரா வோல்வார்த் அரைசதம் (53 ரன், 36 பந்து, 8 பவுண்டரி) விளாசினார்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்களில் அந்த அணியால் 5 விக்கெட்டுக்கு 119 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அலியா ரியாஸ் 39 ரன்களும், தனது 100-வது ஆட்டத்தில் ஆடிய பொறுப்பு கேப்டன் ஜாவேரியா கான் 31 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்த தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. 2-வது தோல்வியை தழுவிய பாகிஸ்தான் வெளியேறியது.

பாகிஸ்தான் கேப்டன் ஜாவேரியா கான் கூறுகையில், ‘கடைசி 2 ஓவர்களில் (29 ரன் கொடுத்தனர்) எங்களது பந்து வீச்சும், பீல்டிங்கும் சரியில்லை. இது மெதுவான ஆடுகளம். அவர்களை 120 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பந்து வீச்சில் எங்களது திட்டமிடலை களத்தில் துல்லியமாக நிறைவேற்ற இயலாமல் போய் விட்டது’ என்றார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீசும் மல்லுகட்டின. ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டோடு களம் புகுந்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவிய நதாலி சிவெர் 57 ரன்கள் (56 பந்து, 6 பவுண்டரி) திரட்டினார். நடப்பு தொடரில் சிவெரின் 3-வது அரைசதம் இதுவாகும். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சுழல் வலையில் சிக்கி 17.1 ஓவர்களில் வெறும் 97 ரன்னில் முடங்கியது. சுழற்பந்து வீச்சாளர்கள் சோபி எக்லெஸ்டோன் 3.1 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளும், சாரா கிளென் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி அரைஇறுதியை உறுதி செய்தது.

மெல்போர்னில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-இலங்கை (அதிகாலை 5.30 மணி), ஆஸ்திரேலியா-நியூசிலாந்து (காலை 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் ஏற்கனவே இந்தியா அரைஇறுதியை எட்டி விட்ட நிலையில், மற்றொரு அணி ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்பது இன்று தெரிந்து விடும்.

Next Story