ரஞ்சி கிரிக்கெட் அரை இறுதியில் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் இலக்கு


ரஞ்சி கிரிக்கெட் அரை இறுதியில் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 3 March 2020 12:10 AM GMT (Updated: 3 March 2020 12:10 AM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால்-கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் அணி 312 ரன்னும், கர்நாடக அணி 122 ரன்னும் எடுத்தன. 190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 2-வது இன்னிங்சில் 161 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதைத்தொடர்ந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், ரவிகுமார் சமர்த் 27 ரன்னிலும், கேப்டன் கருண் நாயர் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தேவ்துத் படிக்கல் 50 ரன்னுடனும், மனிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. கர்நாடக அணி வெற்றி பெற மேலும் 254 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கிறது.

சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 304 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய குஜராத் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து தடுமாறியது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய குஜராத் அணி முதல் இன்னிங்சில் 252 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 52 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து திணறியது. சேத்தன் சகாரியா 32 ரன்னுடனும், அர்பித் வசவாடா 23 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். குஜராத் அணி தரப்பில் சின்டன் காஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Next Story