பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு தகுதி


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 3 March 2020 12:18 AM GMT (Updated: 3 March 2020 12:18 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

மெல்போர்ன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் மெல்போர்னில் நேற்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் சோபி டேவின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெத் மூனி 60 ரன்கள் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ரன்களே எடுக்க முடிந்தது. கேத்தி மார்ட்டின் 37 ரன்னுடனும் (18 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), லிக் காஸ்பெரெக் 3 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜார்ஜியா வார்ஹம், மெகன் ஸ்குட் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு வீராங்கனை ஜார்ஜியா வார்ஹம் ஆட்டநாயகி விருது பெற்றார்.

இதே மைதானத்தில் முன்னதாக நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் (ஏ பிரிவு) அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றது.

‘ஏ’ பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி முதலிடத்தையும், ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்தையும் பிடித்தன. இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக ஆஸ்திரேலியா அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஏற்கனவே இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் ‘பி’ பிரிவு கடைசி லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்-தாய்லாந்து (காலை 9.30 மணி), தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் இருந்து இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.


Next Story