ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 3 March 2020 11:46 PM GMT (Updated: 3 March 2020 11:46 PM GMT)

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.

சைல்ஹெட்,

வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 158 ரன்கள் (136 பந்து, 20 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கி சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டியில் வங்காளதேச வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இச்சிறப்பும் அவரது வசம் தான் (154 ரன்) இருந்தது.

அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியில் கமுன்ஹூகாம்வே (51 ரன்), வெஸ்லி மாதேவிர் (52 ரன்), சிகந்தர் ராசா (66 ரன்) அரைசதம் அடித்தனர். ஆனாலும் ஒரு கட்டத்தில் 225 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே தடுமாறியது. கடைசி கட்டத்தில் முதோம்போட்ஸி (34 ரன்), டொனால்டு திரிபனோ அதிரடி காட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. அல்-அமிர் ஹூசைன் வீசிய இறுதி ஓவரில் திரிபனோ 2 சிக்சர் விளாச, மொத்தம் 15 ரன்கள் வந்தது. கடுமையாக போராடிய ஜிம்பாப்வே அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 318 ரன்களே எடுக்க முடிந்தது. திரிபனோ 55 ரன்களுடன் (28 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்த வங்காளதேச அணி 3 போட்டி கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story