ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 March 2020 12:28 AM GMT (Updated: 2020-03-04T05:58:38+05:30)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடகாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா,

86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கொல்கத்தாவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால்-கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் 312 ரன்னும், கர்நாடகா 122 ரன்னும் எடுத்தன. 190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 161 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

இதையடுத்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து தடுமாறியது. தேவ்துத் படிக்கல் 50 ரன்னுடனும், மனிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றி பெற மேலும் 254 ரன்கள் தேவை என்ற நிலையுடன் கர்நாடக அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. பெங்கால் வீரர்களின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கர்நாடக அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 55.3 ஓவர்களில் கர்நாடக அணி 177 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் பெங்கால் அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக தேவ்துத் படிக்கல் 52 ரன்னும், அபிமன்யு மிதுன் 38 ரன்னும் எடுத்தனர். கர்நாடக அணி தனது எஞ்சிய 7 விக்கெட்டுகளை 79 ரன்களுக்குள் இழந்தது.

பெங்கால் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ்குமார் 6 விக்கெட்டும், இஷான் போரெல், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பெங்கால் வீரர் அனுஸ்டாப் மஜூம்தர் (149 நாட்-அவுட்) ஆட்டநாயகன் விருது பெற்றார். 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பெங்கால் அணி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்துள்ளது. கடைசியாக அந்த அணி 2007-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்று இருந்தது.

சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 304 ரன்னும், குஜராத் அணி 252 ரன்னும் எடுத்தன. 52 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து இருந்தது. சேத்தன் சகாரியா 32 ரன்னுடனும், அர்பித் வசவதா 23 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 98.4 ஓவர்களில் 274 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக அர்பித் வசவதா 139 ரன்னும், சிராக் ஜனி 51 ரன்னும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் சின்டன் காஜா 7 விக்கெட்டும், அர்ஜான் நாக்வஸ்வல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய குஜராத் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.


Next Story