கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Ranji Cricket beat Gujarat Saurashtra team qualifies for the final

ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதியில் சவுராஷ்டிரா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ராஜ்கோட், 

86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ராஜ்கோட்டில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 304 ரன்னும், குஜராத் அணி 252 ரன்னும் எடுத்தன. 52 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 274 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 327 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய குஜராத் அணி 4-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் எடுத்து இருந்தது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அந்த அணி 63 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சிராக் காந்தி, கேப்டன் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் கைகோர்த்தனர். நேர்த்தியாக ஆடிய இந்த இணை பிரியாத வரை குஜராத் அணி இலக்கை எட்டிப்பிடித்து விடும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அணியின் ஸ்கோர் 221 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. பார்த்தீவ் பட்டேல் 148 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் ஹர்விக் தேசாயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அத்துடன் குஜராத் அணியின் நம்பிக்கை தகர்ந்து போனது. 6-வது விக்கெட்டுக்கு பார்த்தீவ் -சிராக் கூட்டணி 158 ரன்கள் சேர்த்தது. சிராக் காந்தியும் (96 ரன்) உனட்கட்டின் பந்து வீச்சில் சிக்கினார்.

முடிவில் குஜராத் அணி 2-வது இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 234 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் சவுராஷ்டிரா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சவுராஷ்டிரா அணி தரப்பில் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனட்கட் 7 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.

ரஞ்சி போட்டியில் இந்த சீசனில் ஜெய்தேவ் உனட்கட் இதுவரை 65 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் ரஞ்சி போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜெய்தேவ் உனட்கட் தனதாக்கினார். இதற்கு முன்பு 1998-99-ம் ஆண்டில் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ் 62 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 21 ஆண்டு கால அந்த சாதனையை ஜெய்தேவ் உனட்கட் நேற்று தகர்த்தார்.

கடைசி 8 சீசன்களில் சவுராஷ்டிரா அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ராஜ்கோட்டில் வருகிற 9-ந் தேதி தொடங்கும் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி, பெங்காலை சந்திக்கிறது. இறுதி ஆட்டத்தில் புஜாரா (சவுராஷ்டிரா), விருத்திமான் சஹா (பெங்கால்) ஆகியோரும் விளையாட உள்ளனர்.