பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? - இங்கிலாந்துடன் இன்று மோதல்


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? - இங்கிலாந்துடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 5 March 2020 4:15 AM GMT (Updated: 5 March 2020 3:45 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது.

சிட்னி, 

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் பலப்பரீட்சையில் இறங்குகிறது.

லீக் சுற்றில் தோல்வி பக்கமே செல்லாமல் 4 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து பிரமாதப்படுத்திய இந்திய அணி அதே உத்வேகத்துடன் சாதிக்க தீவிரம் காட்டுகிறது. ‘நம்பர் ஒன்’ மங்கை ஷபாலி வர்மாவின் பேட்டிங்கும் (4 ஆட்டத்தில் 9 சிக்சருடன் 161 ரன்) தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் (9 விக்கெட்), ராதா யாதவ் ஆகியோரின் சுழல் ஜாலமும் தான் இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா ஆகியோரின் பேட்டிங் பெரிய அளவில் எடுபடவில்லை. இவர்களும் ஜொலிக்கும் பட்சத்தில் இந்தியாவின் வீறுநடையை தடுக்க முடியாது.

இந்திய அணி ஒரு போதும் இறுதி சுற்றை எட்டியது இல்லை. இதற்கு முன்பு மூன்றுமுறை அரைஇறுதியோடு வெளியேறி இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி இங்கிலாந்துடன் இதுவரை மோதியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வியே தழுவியுள்ளது. இதில் 2018-ம் ஆண்டு அரைஇறுதியில் தோற்றதும் அடங்கும். அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

அண்மையில் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இங்கிலாந்துடன் இரண்டு முறை மோதி அதில் ஒன்றில் வெற்றி பெற்றது இந்தியாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் மூன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டது. ஹீதர் நைட் (193 ரன்), நதாலி சிவெர் (3 அரைசதத்துடன் 202 ரன்) ஆகியோர் இங்கிலாந்தின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் (8 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஷ்ரப்சோல் (8 விக்கெட்) மிரட்டக்கூடியவர்கள்.

ஹீதர் நைட் கூறுகையில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், அபாரமாக பந்து வீசுகிறார். கடந்த உலக கோப்பை போட்டியில் இருந்து நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். எனவே அவரது பந்து வீச்சை நாங்கள் நேர்த்தியாக எதிர்கொள்வது இந்த ஆட்டத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுழற்பந்து வீச்சில் அதிக பயிற்சி எடுத்துள்ளோம்’ என்றார்.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும். இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலக கோப்பை போட்டியில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுடன் 4 முறை மோதியிருக்கும் தென்ஆப்பிரிக்கா அனைத்திலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. இந்த முறை அதற்கு பழிதீர்க்க வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Next Story