மற்றொரு அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா


மற்றொரு அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 6 March 2020 12:05 AM GMT (Updated: 6 March 2020 12:05 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவுடன் அதே சிட்னி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு மோதியது.

இங்கு நடக்க இருந்த முதலாவது அரைஇறுதியில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் இந்த ஆட்டத்திற்கு வருணபகவான் வழிவிட்டது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டேன் வான் நீகெர்க் முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 49 ரன்கள் (49 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடியவும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 13 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்காவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியில் லீசெல் லீ (10 ரன்), கேப்டன் நீகெர்க் (12 ரன்), மிக்னோன் டு பிரீஸ் (0) ஆகியோர் விரைவில் வெளியேறியதால் நெருக்கடி ஏற்பட்டது. இறுதிபந்து வரை தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் போராடியும் பலன் இல்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்ட போது அவர்களால் அந்த ஓவரில் 13 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 13 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 92 ரன்களே எடுத்தது. லாரா வோல்வார்த் 41 ரன்களுடன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய கேப்டன் மெக்லானிங் கூறுகையில், ‘மழையால் நாங்கள் பதற்றத்திற்கு உள்ளானோம். நாங்கள் களம் காணும் அளவுக்கு மைதானத்தை உலரவைத்து தயார்படுத்திய சிட்னி மைதான ஊழியர்களின் பணி அற்புதமானது. நாங்கள் களம் கண்ட போது வானிலையும் ஓரளவு சீரடைந்தது அதிர்ஷ்டமே’ என்றார். இந்த ஆட்டம் மழையால் ரத்தாகியிருந்தால் தென்ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 8-ந்தேதி மெல்போர்னில் அரங்கேறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை சந்திக்கிறது. இறுதி ஆட்டத்திற்கு மாற்று நாள் உண்டு. இறுதிப்போட்டிக்கு 60 ஆயிரம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுள்ளன.

Next Story