கிரிக்கெட்

பரிசுத்தொகை குறைப்பு, கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் : ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம் + "||" + Dropping the prize reduction, the tariff hike decision: IPL Team owners letter to management

பரிசுத்தொகை குறைப்பு, கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் : ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம்

பரிசுத்தொகை குறைப்பு, கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் : ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம்
பரிசுத்தொகை குறைப்பு, ஆட்டத்தை நடத்துவதற்கான கட்டண உயர்வு ஆகிய முடிவை கைவிட வேண்டும் என்று ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.

இந்த சீசனுக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்ட ஐ.பி.எல். நிர்வாகம் சமீபத்தில் பாதியாக குறைத்தது. கடந்த ஆண்டு பட்டம் வென்ற அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அது ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகையை ரூ.12½ கோடியில் இருந்து ரூ.6¼ கோடியாக குறைத்துள்ளது. 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளின் பரிசுத்தொகையிலும் 50 சதவீத வெட்டு விழுந்துள்ளது.


அதே சமயம் ஒவ்வொரு மைதானத்திலும் ஐ.பி.எல். ஆட்டத்தை சகல வசதிகளுடன் சிறப்பாக நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு சம்பந்தப்பட்ட அணியின் உரிமையாளர்கள் ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்பதை ரூ.50 லட்சமாக கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது. இந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு அணி நிர்வாகமும் நடப்பு தொடரில் ரூ.1.4 கோடி கூடுதலாக செலவழிக்க வேண்டி வரும்.

இந்த நிலையில் அணிகளின் உரிமையாளர்கள் ஷாருக்கான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஆகாஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), பார்த் ஜின்டால் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), காசி விஸ்வநாதன் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி) உள்ளிட்டோர் கையெழுத்திட்ட கடிதத்தை, ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளனர். அதில் பரிசுத்தொகை குறைப்பு, போட்டியை நடத்துவதற்கான கட்டணம் உயர்வு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள அவர்கள், இது தன்னிச்சையான முடிவு, சம்பந்தப்பட்ட தங்களிடம் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ‘ஆட்டத்தை நடத்துவதற்காக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு நாங்கள் (ஐ.பி.எல். உரிமையாளர்) வழங்கக்கூடிய தொகையை 66 சதவீதம் அதிகரித்துள்ளர்கள். வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்திருக்கிறீர்கள். இந்த இரண்டு முடிவுகளையும் நிறுத்தி வைக்குமாறு ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். ஐ.பி.எல். போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதற்காக வழங்கப்பட்ட உரிமம் 2022-ம் ஆண்டு வரை இருக்கிறது. அதுவரை பழைய நிலையே தொடர வேண்டும். அதன் பிறகு இத்தகைய மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசித்து முடிவுக்கு வரலாம்’ என்றும் அதில் கூறியுள்ளனர்.

அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். நிர்வாகம் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரிசீலித்திருக்க வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் போட்டியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் போது நாங்கள் எப்படி வருமானம் ஈட்டுவது? இதன்படி பார்த்தால் டிக்கெட் மூலம் பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. இத்தகைய சூழலில் எங்களை ஏன் இந்த மாதிரி தண்டிக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.