‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்


‘மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும்’ - கோலி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 March 2020 12:19 AM GMT (Updated: 21 March 2020 12:19 AM GMT)

மோடியின் அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

‘கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 22-ந் தேதி (நாளை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அன்று மக்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியும், அவரது மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து விராட்கோலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘நாம் இப்போது மிகவும் கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி தெரிவித்துள்ள அறிவுரைகள் அனைத்தையும் மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் நாம் விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிராக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி. மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு வீட்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே ஒரே வழியாகும்’ என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.


Next Story