கிரிக்கெட்

ஐ.பி.எல். ஆதாயத்துக்காக இந்திய கேப்டன் கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதம் செய்வதில்லை - மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு + "||" + The teams. Australian players do not argue with Indian captain Kohli for gain - Michael Clarke

ஐ.பி.எல். ஆதாயத்துக்காக இந்திய கேப்டன் கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதம் செய்வதில்லை - மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு

ஐ.பி.எல். ஆதாயத்துக்காக இந்திய கேப்டன் கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதம் செய்வதில்லை - மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் போது ஐ.பி.எல். ஆதாயத்தை மனதில் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்வதில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டியுள்ளார்.
மெல்போர்ன், 

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. கொரோனா அச்சத்தால் 13-வது ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறி தான். இந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். அவரை ரூ.15½ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இதே போல் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லை ரூ.10¾ கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, ஹேசில்வுட், கிறிஸ் லின், நாதன் கவுல்டர்-நிலே, கேன் ரிச்சர்ட்ஸ், ஆண்ட்ரூ டை உள்பட மொத்தம் 17 ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் உள்ளனர். இதனால் ஏதாவது ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். போட்டி நடக்க வேண்டும் என்ற ஆவலோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தங்களது ஐ.பி.எல். ஒப்பந்தத்துக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் சர்வதேச போட்டிகளில் ஆடும் போது பகைத்துக் கொள்வதில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டியுள்ளார். 39 வயதான கிளார்க்குக்கும் ஐ.பி.எல்.ல் விளையாடிய அனுபவம் உண்டு. அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கிரிக்கெட்டில் நிதி ஆதாரம், வருவாய் அடிப்படையில் சர்வதேச அளவிலும், உள்ளூரில் ஐ.பி.எல். அளவிலும் இந்தியா எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவர். ஆஸ்திரேலியாவும், மற்ற நாட்டு கிரிக்கெட் அணியினரும் குறிப்பிட்ட காலத்தில் தங்களது இயல்பான குணாதிசயத்தை கைவிட்டு இந்திய வீரர்களுக்கு பிடித்தது மாதிரி நடந்து கொள்கிறார்கள். அந்த சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச போட்டியில் விளையாடும் போது அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராக களத்தில் திட்டுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ அஞ்சுவதை பல முறை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் அவர்களுடன் இணைந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டி இருப்பதே இதற்கு காரணம்.

ஐ.பி.எல். போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிக மவுசு உள்ளது. இந்திய முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியர்களை தங்களது ஐ.பி.எல். அணிகளுக்கு இழுக்கிறார்கள். எனவே விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை, அப்போது தான் அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 6 வார காலத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.7½ கோடி ) நம்மை ஏலத்தில் எடுப்பார் என்ற மனநிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருப்பதாக கருதுகிறேன்.

அதனால் குறிப்பிட்ட காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு மிகவும் ஆக்ரோஷம் இன்றி கொஞ்சம் சாதாரணமாக இருப்பதை காண முடிகிறது. இவ்வாறு கிளார்க் கூறினார்.