உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்


உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்
x
தினத்தந்தி 9 April 2020 12:20 AM GMT (Updated: 9 April 2020 12:20 AM GMT)

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது.

லண்டன், 

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்கு அங்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் ரூ.4½ கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நலநிதி திரட்டுவதற்காக கடந்த ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் போது தான் அணிந்திருந்த பனியனை (டி சர்ட்) ஏலம் விடுவதாக அறிவித்து இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் அரைசதம் விளாசினார். அத்துடன் ஆட்டம் சமன் ஆனதால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை ரன்அவுட் செய்து உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த அந்த பனியன் குறிப்பிட்ட நிறுவனம் மூலம் ஆன்-லைனில் ஏலம் விடப்பட்டது. இதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 82 பேர் ஏலம் கேட்டனர். இதனால் ஆயிரத்தில் ஆரம்பித்த தொகை லட்சத்தை தாண்டியது. இறுதியில் இந்த பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது. இதன் மூலம் கிடைக்கும் தொகை லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படுகிறது.

Next Story