எந்த ஒரு விளையாட்டு நடத்துவதற்கும் சாதகமான சூழ்நிலை இல்லை - கங்குலி பேட்டி


எந்த ஒரு விளையாட்டு நடத்துவதற்கும் சாதகமான சூழ்நிலை இல்லை - கங்குலி பேட்டி
x
தினத்தந்தி 13 April 2020 12:33 AM GMT (Updated: 13 April 2020 12:33 AM GMT)

ஐ.பி.எல். உள்ளிட்ட எந்த விளையாட்டு நடத்துவதற்கும் சாதனமான சூழ்நிலை இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா பீதியால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா நோய் தொற்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்தாகுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டதற்கு அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

‘நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய சூழலில் ஐ.பி.எல். குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். யாரும் எங்கும் செல்ல முடியவில்லை. இதே நிலைமை மே மாதத்தின் இறுதிவரை போகும் என்று தோன்றுகிறது.

இத்தகைய நிலைமையில் வீரர்கள் எங்கிருந்து வருவார்கள். அவர்கள் எப்படி பயணம் மேற்கொள்வார்கள். இது போன்ற விஷயங்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உலகின் எந்த விளையாட்டுக்கும் இப்போது சாதகமான சூழ்நிலை இல்லை. ஐ.பி.எல். போட்டியை மறந்து விடுங்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஐ.பி.எல். தொடர் குறித்த உறுதியான தகவலை இன்று வழங்குகிறேன். யதார்த்தமாக பேச வேண்டும் என்றால் கொரோனாவினால் உலகில் எல்லோருடைய வாழ்க்கையும் நிர்கதியாகி இருக்கும் போது, விளையாட்டுக்கு ஏது எதிர்காலம்? இவ்வாறு கங்குலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து ஐ.பி.எல். குறித்து நாங்கள் முடிவு செய்வோம்’ என்றார். ஐ.பி.எல். ரத்தானால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story