ஓராண்டாக விளையாடாத டோனியை இந்திய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்? - கவுதம் கம்பீர் கேள்வி


ஓராண்டாக விளையாடாத டோனியை இந்திய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்? - கவுதம் கம்பீர் கேள்வி
x
தினத்தந்தி 14 April 2020 12:12 AM GMT (Updated: 14 April 2020 12:12 AM GMT)

ஓராண்டாக விளையாடாத டோனியை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை. இந்திய அணி நிர்வாகமும் அவரை ஓரங்கட்டிவிட்டு விக்கெட் கீப்பிங் பணிக்கு லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் ஆகியோரை பயன்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்ய வேண்டும் என்று டோனி திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை (நாளை) தள்ளிவைக்கப்பட்டது. இப்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அனேகமாக இந்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடர்? காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் 38 வயதான டோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக இந்திய முன்னாள் வீரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார். 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்வதில் டோனியுடன் இணைந்து முக் கிய பங்காற்றிய கம்பீர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்காவிட்டால் அதன் பிறகு டோனி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவது மிகவும் கடினமாகிவிடும். கிட்டத்தட்ட கடந்த ஓராண்டாக எந்த போட்டிகளிலும் விளையாடாத அவரை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும்?

டோனிக்கு பொருத்தமான மாற்று வீரராக லோகேஷ் ராகுல் இருக்கக்கூடும். குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் அவரது விக்கெட் கீப்பிங் பணியையும், பேட்டிங்கையும் நான் பார்த்து இருக்கிறேன். அவரது விக்கெட் கீப்பிங் திறமை டோனி அளவுக்கு கிடையாது. ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் பலன் தரக்கூடியவராக இருப்பார்.

விக்கெட் கீப்பிங்கோடு 3-வது மற்றும் 4-வது வரிசையில் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். எனவே ஐ.பி.எல். நடக்காவிட்டால் டோனி மறுபடியும் இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு மங்கி போய் விடும். டோனியின் ஓய்வு திட்டம் என்பது அவரது சொந்த விருப்பம். இவ்வாறு கம்பீர் கூறினார்.

மற்றொரு இந்திய முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகையில், ‘டோனி இந்திய அணிக்கு மறுபடியும் வருகிறாரோ? இல்லையோ? ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஓரிரு ஆண்டுகள் விளையாடுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தொடர்ந்து ஆடுவார். அந்த அளவுக்கு நல்ல உடல்தகுதியுடன் இருக் கிறார். வயது வெறும் நம்பர் மட்டும் தான். குறிப்பாக டோனி போன்ற வீரர்கள் உடல் அளவில் மட்டுமின்றி மனரீதியாகவும் வலுமிக்கவர்கள், விவேகமானவர்கள். ஒரு கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகமாக வழிநடத்துகிறார். இந்த பணியை அவர் வெற்றிகரமாக செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவதை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பார்கள்.

இந்த ஐ.பி.எல். மட்டுமல்ல, அனேகமாக மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் நீடிப்பார் என்று நம்புகிறேன். அதன் பிறகே ஒரு கிரிக்கெட் வீரராக தனது எதிர்காலம் குறித்து தீர்மானிப்பார். டோனி எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவு எடுக் கக்கூடியவர். கடந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகே தனது அடுத்த கட்ட திட்டம் குறித்து நிச்சயம் கேப்டன் விராட் கோலியிடமும், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடமும் சொல்லி இருப்பார்’ என்றார்.

Next Story