ஐ.பி.எல். போட்டிக்காக ஆசிய கோப்பையை ரத்து செய்ய அனுமதிக்க மாட்டோம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார்


ஐ.பி.எல். போட்டிக்காக ஆசிய கோப்பையை ரத்து செய்ய அனுமதிக்க மாட்டோம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார்
x
தினத்தந்தி 16 April 2020 12:23 AM GMT (Updated: 16 April 2020 12:23 AM GMT)

ஐ.பி.எல். போட்டிக்காக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய நாங்கள் அனுதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி தெரிவித்துள்ளார்.

லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

‘காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு வசதியாக, செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று யூகத்தின் அடிப்படையில் வெளியாகி இருக்கும் செய்திகளை பார்த்தும், கேட்டும் இருக்கிறேன். இருப்பினும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? இல்லையா? என்பதை பாகிஸ்தான், இந்திய கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமே முடிவு செய்ய முடியாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த போட்டியில் மற்ற நாடுகளும் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டியில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆசிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது பெரும் சவாலானதாகும். தற்போதைய சூழ்நிலையில் இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்பது எங்களுக்கு தெரியாது.

ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால், இந்த போட்டியில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாய் பகிர்வு உறுப்பு நாடுகளுக்கு கிடைக்காமல் போகக்கூடும். இதனால் பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் நிதி இழப்பை சந்திக்கும். தற்போது அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு நிலை நீடித்தாலும், மற்ற நாடுகளை காட்டிலும் எங்களால் சிரமமின்றி செயல்பட முடியும். வழக்கமாக ஜூன் மாதத்தில் ஐ.சி.சி.யிடம் இருந்து எங்களுக்கு சுமார் ரூ.60 கோடி கிடைக்கும். ஆனால் இந்த முறை அது கிடைக்காமல் போகலாம். எனவே அதற்கு தகுந்தபடி நாங்கள் திட்டமிட வேண்டும். வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய பங்குதாரர்கள். உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களின் நலன்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும். வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படமாட்டாது. முன்னாள் வீரர்களுக்கு பென்சன் தடையின்றி வழங்கப்படும்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது சிரமமான விஷயமாகும். அதேநேரத்தில் டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிகளை ஒரே காலகட்டத்தில் நடத்தலாம். இக்கட்டான இந்த தருணத்தில் நாம் ஒருவொருக்கொருவர் உதவிகரமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

நாங்கள் நஷ்டத்தால் பாதிப்படைந்து இருக்கிறோம். ஆனால் இந்தியாவுடனான தொடர் குறித்த சிந்தனையோ, திட்டமோ எங்களுக்கு கிடையாது. இந்தியாவின் தயவு இல்லாமல் நாங்கள் இருக்க வேண்டும். நாங்கள் வாழ்வதற்கு அவர்களின் தயவு தேவையில்லை. இந்தியா நம்முடன் விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் இன்றி நாம் திட்டமிட வேண்டும். ஒன்றிரண்டு முறை பாகிஸ்தானுடன் விளையாடுவதாக உறுதி அளித்துவிட்டு கடைசி நேரத்தில் அவர்கள் விலகி கொண்டனர். தற்போது நாம் இந்தியாவுக்கு எதிராக ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறோம். அதுவே போதுமானதாகும். ஏனெனில் நாம் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறோம். மேலும் அரசியலையும், விளையாட்டையும் தனித்தனியாக பார்க்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story