அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி


அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி
x
தினத்தந்தி 17 April 2020 12:25 AM GMT (Updated: 17 April 2020 12:25 AM GMT)

நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

புதுடெல்லி,

பெண்களுக்கான 12-வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு, போட்டியை நடத்தும் நியூசிலாந்து மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி. ) சார்பில் நடத்தப்படும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். எஞ்சிய 3 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

‘டாப்-8’ அணிகள் இடையிலான ஐ.சி.சி. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஒரு சில ஆட்டம் மட்டும் எஞ்சி இருந்தன. இந்த போட்டி தொடரில் கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்ததால் அந்த போட்டி நடைபெற முடியாமல் போனது.

கடந்த மாதத்தில் (மார்ச்) ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணியும், இந்த மாதத்தில் நியூசிலாந்து-இலங்கை அணியும் மோத இருந்த கடைசி சுற்று ஆட்டங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. எனவே இந்த போட்டிகளில் மோத இருந்த அணிகளுக்கு வெற்றி புள்ளிகளை பகிர்ந்து அளிக்க ஐ.சி.சி. டெக்னிக்கல் கமிட்டி முடிவு செய்து அறிவித்துள்ளது. இதனால் இந்திய பெண்கள் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறது.

பெண்களுக்கான ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி (37 புள்ளிகள்) முதலிடமும், இங்கிலாந்து அணி (29 புள்ளிகள்) 2-வது இடமும், தென்ஆப்பிரிக்க அணி (25 புள்ளிகள்) 3-வது இடமும், இந்திய அணி (23 புள்ளிகள்) 4-வது இடமும் பிடித்து நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி கண்டன. நியூசிலாந்து அணி (17 புள்ளிகள்) 6-வது இடம் பெற்றாலும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி (19 புள்ளிகள்) 5-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் அணி (13 புள்ளிகள்) 7-வது இடமும், இலங்கை அணி (5 புள்ளிகள்) 8-வது மற்றும் கடைசி இடமும் பெற்று நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.

பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை போட்டியின் எஞ்சிய 3 இடத்துக்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் ஜூலை 3-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து மற்றும் மண்டல தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற தாய்லாந்து, ஜிம்பாப்வே, பப்பூவா நியூ கினியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தகுதி சுற்று போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story