கிரிக்கெட்

‘ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடந்தால் நன்றாக இருக்காது’ - தெண்டுல்கர் சிறப்பு பேட்டி + "||" + It would not be good if a cricket match was played without the fans - Tendulkar special interview

‘ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடந்தால் நன்றாக இருக்காது’ - தெண்டுல்கர் சிறப்பு பேட்டி

‘ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடந்தால் நன்றாக இருக்காது’ - தெண்டுல்கர் சிறப்பு பேட்டி
‘ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தால் நன்றாக இருக்காது’ என்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
மும்பை, 

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவரும், மாயாஜால பேட்டிங் மூலம் எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவருமான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டாலும், அவரது புகழ் இன்னும் சற்றும் குறையாமல் கோகினூர் வைரம் போல் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறது. சரித்திர நாயகன் சச்சின் தெண்டுல்கருக்கு 46 வயது முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) 47-வது வயது பிறக்கிறது. வழக்கமாக தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடும் தெண்டுல்கர், கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே இன்னல்களை சந்தித்து வருவதால் இந்த முறை தனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று தெரிவித்து விட்டார். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் முன்னின்று போராடும் டாக்டர்கள், நர்சு, போலீசார் ஆகியோரை பாராட்டும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு தெண்டுல்கர் நேற்று மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: கொரோனாவினால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பதில்: நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடவில்லை என்றால், அதை நமது நாட்டில் இருந்து விரட்ட முடியாது. கொரோனாவை தோற்கடிக்க ஒரு அணியாக நின்று போராடவேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் உள்பட அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்றவேண்டும். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் ஊரடங்கை கடைபிடிக்கிறோம். ஒருவருக்கொருவர் செய்யும் இந்த உதவி நன்றாக இருந்தால், நமது நாடும் நலமாக இருக்கும்.

கேள்வி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: கிரிக்கெட் மீண்டும் எப்போது நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து முழுமையான ஒப்புதல் கிடைத்த பின்னர் நடக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஏனென்றால் அவர்களுக்குத்தான் அனைத்து விவரங்களும் தெரியும். நாம் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக கருதி, கிரிக்கெட் விளையாடலாம் என்று நினைக்கிறோம். கிரிக்கெட் மட்டும் இல்லை, எந்த வேலையாக இருந்தாலும் சரி, இது உயிரை காப்பாற்றுவதற்கான போராட்டம். வாழ்க்கையை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்றுவதற்கு முயல வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்திய அரசிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்த உடன், விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்யமுடியும்.

கேள்வி: தேவைப்பட்டால் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்தில் போட்டியை நடத்தினால் நன்றாக இருக்குமா?

பதில்: ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் விளையாடுவது நன்றாக இருக்காது. பொதுவாக விளையாட்டு வீரர்கள் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கும் சூழலில் விளையாடி பழக்கப்பட்டவர்கள். பவுண்டரியோ, சிக்சரோ அடிக்கும்போதும், விக்கெட் எடுக்கும்போதும் மைதானத்தில் கேட்கும் ரசிகர்களின் சத்தம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது உணர்வுப்பூர்வமாக இருக்கும். ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் போட்டிகள் நடத்தும் சூழல் வரக்கூடாது. ஏனென்றால் வீரர்களின் உற்சாகம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

கேள்வி: க டந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு விளையாடாத மூத்த வீரர் டோனியின் எதிர்காலம் குறித்து எழும் செய்திகள் குறித்தும், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு அவரால் திரும்ப முடியுமா? என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இதுபற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

கேள்வி: தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வம் இளம் வீரர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இத்தகைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் டெஸ்ட் இன்னிங்சில் தனிநபர் அதிகபட்ச ரன் (400 ரன்கள் நாட்அவுட்) சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா? அப்படி என்றால் அதனை செய்ய தகுதி படைத்த வீரர்கள் யார்?

பதில்: நமது நாட்டில் உருவாகும் வீரர்களை முதலில் பார்க்கவேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்றால் முறியடிக்கலாம். இதுதொடர்பாக பிரையன் லாராவிடம் கேட்ட போது, நான் 400 ரன்கள் அடிப்பேன் என்பது எனக்கே தெரியாது என்று கூறியிருந்தார். அதாவது யாரும் திட்டமிட்டு சென்று ரன்களை குவிக்க முடியாது. நமது நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் பெயரை அவர்கள் உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள். சாதனைகளை யாரும் சொல்லி முறியடிக்கமுடியாது. சாதனைகள் தனக்கு தானே தகர்க்கப்படுகிறது. நன்றாக விளையாடும் வீரர்கள் நமது அணியில் இப்போதும் இருக்கிறார்கள். எதிர்கால நட்சத்திரங்களாக பிரித்வி ஷா, சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட் உள்ளிட்ட திறமையான பல வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்திய அணியின் பெயரை மிளிரச் செய்வார்கள்.

கேள்வி: தாங்கள் ஆடிய போது இருந்த இந்திய அணிக்கும், விராட்கோலி தலைமையிலான தற்போதைய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: வேறு அணியோடு விளையாடும் போதுதான் அணியை மதிப்பிடமுடியும். நாம் மோதும் அணி எவ்வளவு பலமாக இருக்கிறார்கள்? என்பதையும் நாம் பார்க்கவேண்டும். வேறுபாடு இருக்கத்தான் செய்யும். விதிமுறைகளும் வேறுபட்டிருக்கிறது. விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டால், பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் மாறுபடும். முன்பு தவறான தீர்ப்பு அளிக்கப்பட்டால் பேட்ஸ்மேன்கள் முதலில் ஓய்வு அறையில் உட்கார வேண்டியது இருந்தது. இப்போது தவறான முடிவு என்றால், மூன்றாவது நடுவர் பேட்ஸ்மேனை காப்பாற்றிவிடுகிறார். இதேபோல் பவுலர்களும் அப்பீல் செய்து சரியான முடிவை பெற முடிகிறது.

உதாரணமாக சிட்னியில் நடந்த போட்டியை (2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ) சொல்லலாம். அந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். ரிக்கி பாண்டிங் அவுட் ஆனார். மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்திருந்தால் அந்த போட்டியை ஜெயிப்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இதேபோல் ஆண்ட்ரூ சைமண்சும் அவுட் தான். ஆனால் 2 பேருக்கும் நடுவர் நாட்-அவுட் வழங்கினார். இது அப்போதைய சூழலாக இருந்தது. இப்போதைய காலக்கட்டத்தில் இதே நிலை இருந்தால் முடிவு (டி.ஆர்.எஸ். முறையை குறிப்பிட்டு) வேறு மாதிரி இருந்திருக்கும். இதுபோன்ற பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நாம் பார்க்கவேண்டும். எந்த விதிமுறையால் பலன் கிடைத்தது, எந்த விதிமுறையால் பலன் கிடைக்கவில்லை என்பதை ஆராயவேண்டும்.

கேள்வி: தற்போது சீனியர் வீரர்களிடம், இளம் வீரர்கள் காட்டும் மரியாதை குறைந்து விட்டதாக யுவராஜ்சிங் கூறியிருப்பது சரியா?

பதில்: இதை யுவராஜ்சிங் தான் தெரிவிக்கவேண்டும். அவர் தெரிவித்த கருத்துக்கு, நான் எப்படி பதில் கூற முடியும். என்னை பொறுத்தவரையில் அவர் தெரிவித்தது ‘லூஸ் டாக்’. 1845-ம் ஆண்டு என்ன நடந்தது என்று கேட்டால் உங்களுக்கு தெரியுமா? நான் இல்லாத சமயத்தில் நடந்ததாக கூறப்படுவதை என்னால் எப்படி உறுதிப்படுத்த முடியும். நாம் இல்லாதபோது நடந்தது குறித்து கேட்டால் நமக்கு எப்படி தெரியும்?

கேள்வி: ஊரடங்கு குறித்த உங்களது அனுபவம் என்ன? தற்போது வீட்டில் நேரத்தை எப்படி கழிக்கிறீர்கள்?

பதில்: ஊரடங்கு காலக்கட்டத்தில் காலை நேரத்தில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். செல்போன் மூலமாக அலுவலக மீட்டிங்குகளில் பங்கேற்கிறேன். மாலை நேரத்தில் சினிமா படம் பார்ப்பது, நாடகம் பார்ப்பது, குழந்தைகளோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது, என்னுடைய தாயோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது என்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறேன். காலை நேரத்தில் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவேன். இதனை மகிழ்ச்சியோடு செய்கிறேன்.என்று சச்சின் தெண்டுல்கர் கூறினார்.

தெண்டுல்கருக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகள்

கேள்வி: சென்னை மைதானம் மற்றும் ரசிகர்கள் குறித்த உங்களது பார்வை?. சென்னையில் விளையாடிய காலக்கட்டத்தில் தமிழ் வார்த்தைகள் கற்று உள்ளர்களா?

பதில்: சென்னை மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானம். இந்தியாவிலேயே எனக்கு விருப்பமான மைதானம் அதுதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறேன். சென்னைவாசிகள் மிகவும் அன்பானவர்கள். எனக்கு அதிக ஆதரவு கொடுத்தவர்கள். சென்னைவாசிகளுக்கு மிகப்பெரிய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களோடு எனக்கு அளவிட முடியாத அனுபவம் உண்டு. சென்னை ரசிகர்களின் முன் பேட்டிங் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘தண்ணீர் கொடுப்பா’, ‘முன்னாடி’, ‘பின்னாடி’ என்ற கிரிக்கெட் போட்டியின் போது சொல்லப்படும் சில வார்த்தைகளை தமிழில் என்னால் சொல்லமுடியும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய அணிக்கு 303- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
ஆஸ்திரேலிய அணிக்கு 303-ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.