எச்சிலை பயன்படுத்த தடை: பந்தை சிறிய பொருளால் தேய்ப்பதற்கு அனுமதி வழங்க ஐ.சி.சி. திட்டம்?


எச்சிலை பயன்படுத்த தடை: பந்தை சிறிய பொருளால் தேய்ப்பதற்கு அனுமதி வழங்க ஐ.சி.சி. திட்டம்?
x
தினத்தந்தி 24 April 2020 11:00 PM GMT (Updated: 24 April 2020 7:43 PM GMT)

எச்சில் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால் டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதி அளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்கிறது.

துபாய், 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்தை எச்சிலால் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அவ்வாறு செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகளில் பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது. பந்து களத்தில் உள்ள எல்லா வீரர்களின் கைக்கும் செல்லும். பந்து மீது எச்சில் படும் போது அதன் மூலம் மற்ற வீரர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி.யின் மருத்துவ கமிட்டி எச்சரித்துள்ளது.

சர்வவேதச ஒருநாள் போட்டியில் வெள்ளை நிற பந்து பிரச்சினை இல்லை. ஆனால் 5 நாள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு நிற பந்தை தொடர்ந்து தேய்த்து பளபளப்பு செய்தால் தான் களத்தில் பிட்ச் ஆனதும் கொஞ்சமாவது நகர்ந்து செல்லும். இல்லாவிட்டால் பந்து வீச்சாளர்கள் பாடு திண்டாட்டம் தான் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் கவலை தெரிவித்து இருந்தார்.

இது குறித்து ஐ.சி.சி.யின் நிர்வாக கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு விவாதிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் சரிசம போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும். பழசான பிறகு பந்தை தேய்க்காவிட்டால் பந்து வீச்சாளர்களின் சவால் குறைந்து விடலாம். எனவே நடுவர்களின் மேற்பார்வையின் கீழ் பந்தை சிறிய செயற்கை பொருளை கொண்டு தேய்ப்பதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.

முன்பு பந்தை எதையாவது கொண்டு தேய்ப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீரர் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு போட்டிகளில் பங்கேற்க தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இனி பந்தை சேதப்படுத்துவதை விதிகளுக்குட்பட்டு அங்கீகரிக்க ஐ.சி.சி. திட்டமிட்டு உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கூக்கபுரா, டியூக்ஸ், எஸ்.ஜி. ஆகிய மூன்று வகையான பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பந்துகளுக்கு இடையே சிறுசிறு வித்தியாசங்கள் இருப்பதால், அதற்கு ஏற்ப தேய்க்க பயன்படுத்தப்படும் பொருளிலும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.

ஐ.சி.சி. கமிட்டி, அடுத்த மாதம் அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய எம்.சி.சி.யின் உலக கிரிக்கெட் கமிட்டியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பிறகே பந்தை தேய்ப்பதற்கு அனுமதிக்கப்படுமா என்பது உறுதியாக தெரிய வரும்.


Next Story