‘உலக கோப்பை தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை’ - இந்திய கிரிக்கெட் அணி வீரர் லோகேஷ் ராகுல் சொல்கிறார்


‘உலக கோப்பை தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை’ - இந்திய கிரிக்கெட் அணி வீரர் லோகேஷ் ராகுல் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 April 2020 11:30 PM GMT (Updated: 25 April 2020 7:17 PM GMT)

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் சந்தித்த தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என்று இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் லோகேஷ் ராகுல் ஊரடங்கு அனுபவம் மற்றும் கிரிக்கெட் ஆட்டம் குறித்து டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நானும், எனது குடும்பமும் பெங்களூருவில் பாதுகாப்பாக வசித்து வருகிறோம். பயிற்சியில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து நேரத்தை கழிக்க முயற்சித்து வருகிறேன். தற்போது வீட்டில் நேரத்தை செலவிடுவது நன்றாக தான் இருக்கிறது. தொடர்ச்சியாக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது இடைவெளி எப்போது கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் தற்போது எங்களுக்கு பெரிய இடைவெளி கிடைத்து இருக்கிறது. இதுபோன்ற பெரிய இடைவெளியை நாங்கள் விரும்பவில்லை. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும். இவை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை இந்த நேரம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு எனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினேன். எனவே இதனை மிகவும் சிறப்பான தருணமாக கருதுகிறேன்.

எந்த போட்டியையாவது மாற்ற விருப்பமா? என்று கேட்டால் கடந்த ஆண்டு (2019) நடந்த உலக கோப்பை அரைஇறுதியை தான் சொல்வேன். அந்த தோல்வியில் இருந்து எங்கள் அணியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் இன்னும் மீளவில்லை என்று நான் நினைக்கிறேன். அந்த கெட்ட கனவு இன்னும் சில நேரங்களில் எங்களை விரட்ட தான் செய்கிறது. அந்த தோல்வி சீனியர் வீரர்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உலக கோப்பை போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், அரைஇறுதியில் சந்தித்த தோல்வி மிகவும் கடினமானதாக இருந்தது. இன்னும் சில சமயங்களில் அந்த கெட்ட கனவுடன் தான் எழுந்திருக்கிறேன்.

எந்தவொரு வீரருக்காக வாழ்க்கை முழுவதும் பேட் செய்ய விரும்புவீர்கள் என்று கேட்டால் விராட்கோலிக்காக என்று தான் சொல்வேன். அவர் ஒரு சிறந்த வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனக்காக அவர் எதையும் கொடுப்பார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2015) சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான் அடித்த சதம் சிறப்பானது. அது என்னை பற்றி எனக்கு இருந்த பார்வையையே மாற்றியது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சரிவில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு அந்த ஆட்டம் அதிக நம்பிக்கை அளித்தது. அந்த இன்னிங்சில் கிடைத்த நம்பிக்கை என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது என்று அவர் கூறினார்.

கொரோவினால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவர்களுக்கு உதவுவதற்காக, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் தான் பயன்படுத்திய பேட், ஹெல்மெட், ஜெர்சி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏலம் விட லோகேஷ் ராகுல் வழங்கி இருந்தார். இந்த பொருட்கள் மொத்தம் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 572க்கு ஏலம் போனது. அதிகபட்சமாக அவரது பேட் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 228க்கு ஏலம் போய் இருக்கிறது.

Next Story