ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் நீக்கம்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் நீக்கம்
x
தினத்தந்தி 30 April 2020 9:56 AM GMT (Updated: 30 April 2020 7:01 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து சீனியர் பேட்ஸ்மேன்கள் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2020-2021-ம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 20 வீரர்களை கொண்ட இந்த பட்டியலில் சீனியர் பேட்ஸ்மேன்களான உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. 33 வயதான கவாஜா கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். உஸ்மான் கவாஜா கடைசியாக கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருந்தார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் கவுல்டர்-நிலே, மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ் ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் வெளியேறிய ஸ்டீவன் சுமித்துக்கு பதிலாக மாற்று வீரராக களம் கண்ட மார்னஸ் லபுஸ்சேன் தனது மெச்சத்தகுந்த பேட்டிங்கின் மூலம் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் முதல்முறையாக இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதே போல் மிட்செல் மார்ஷ், ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேத்யூ வேட் ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்து இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நிதி பற்றாக்குறையில் சிக்கி தவித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நெருக்கடிக்கு மத்தியில் தனது ஒப்பந்த வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. வருவாய் இழப்பால் வீரர்களின் ஊதியத்தை குறைத்து வழங்க ஆலோசித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய ஒப்பந்த வீரர்களின் சம்பள விவரம் குறித்து எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜெயே ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் டிரேவர் ஹோன்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘லபுஸ்சேன் உள்பட புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 6 வீரர்களும் தங்களது திறமையின் அடிப்படையில் ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்கள். ஒப்பந்த பட்டியலில் இடம் பிடிக்க முடியாத வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் தங்கள் இடத்தை உறுதி செய்ய முடியும். ஒப்பந்த பட்டியலில் ஒருவர் இடம் பெற முடியாமல் போனதால் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வு செய்யபடமாட்டார் என்று அர்த்தம் கிடையாது’ என்றார்.

Next Story